தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகள் ஹேக் செய்யப்பட்டதா ? - இயக்குநர் பதில்

கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகள் ஹேக் செய்யப்பட்டதா ? - இயக்குநர் பதில்

webteam

கூட‌ங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக பரவி வரும் தகவல் தவறானது என்று வளாக‌ இயக்குநர் சஞ்சய்குமார் விளக்கமளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அக்டோபர் 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இவ்விரு அணுஉலைகளிலும் பழுது ஏற்பட்டு, பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், பல ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும்‌,‌ அதன் காரணமாக 2 அணு உலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் ப‌ரவின. 

இதுகுறித்து கூடங்குளம் அணுமின்நிலைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடங்குளம் அணுமின்நிலைய இணையதளம் தன்னிச்சையாக இயங்குகிறது என வளாக இயக்குநர் சஞ்சய்குமார் விளக்கமளித்துள்ளார். இந்த கணினிகளை வெளியிலிருந்து யாரும் இயக்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியாது என்றும், இணையதளங்களில் பரவும் தகவல் தவறானவை என்றும் அவர் தெரிவித்தார். முதல் அணு உலையில் ஆயிரம் மெகா வாட்டும், 2வது அணு உலையில் 600 மெகாவாட்டும் மின் உற்பத்தி நடைபெறுவதாக சஞ்சய்குமார் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார்.