Ditch pt desk
தமிழ்நாடு

மிக்ஜாம் | கண்டெய்னரில் தங்கியிருந்த தொழிலாளர்கள் பள்ளத்தில் விழுந்த அவலம்!

வேளச்சேரியில் கண்டெய்னரோடு இரண்டு தொழிலாளர்கள் விழுந்த பள்ளத்தில், ராட்சத மோட்டர்களை இறக்கி L&T நிறுவனத்தின் உதவியோடு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. அங்கிருக்கும் நமது செய்தியாளர் சுரேஷ்குமார் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.

webteam

சென்னை வேளச்சேரியில் 5 ஃபர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே, ஒரு தனியார் நிறுவன கட்டுமானத்திற்காக 56 அடி ஆழம், 178 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த மழையால், பள்ளம் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு மழைநீரால் நிரம்பியது.

அதீத மழையால், அதன் அருகே ஊழியர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பு கண்டெய்னர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது, கண்டெய்னரில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் பள்ளத்தில் விழுந்துள்ளனர். பின், அதில் இருந்து இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். எனினும், ஜெயசீலன், நரேஷ் என்ற இரண்டு
தொழிலாளர்கள் நீரில் மூழ்கியதால், அவர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் உள்ளது.

பேரிடர் மீட்புப் படையினர், இரு தொழிலாளர்களையும் மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டனர். அதிநவீன மோட்டார்களை பயன்படுத்தி நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீட்புப் பணிகளை பார்வையிட்டார்

கடைசியாக கர்ப்பிணியான தன் மனைவிக்கு, கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் இருந்து ஜெயசீலன் என்ற தொழிலாளி சில புகைப்படங்கள் அனுப்பியுள்ளார். அவர் புகைப்படம் பிடித்த இடத்திலேயே அவர் விபத்தில் சிக்கியுள்ளது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தொழிலாளர்களின் நிலையை அறிந்துகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் வேதனையில் மூழ்கி உள்ளனர்.