கடந்த அக்டோபர் 6-ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகசங்களைக் காண, பொதுமக்கள் லட்சக் கணக்கானோர் திரண்டனர். வெயில் சுட்டெரித்ததாலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட்டநெரிசல் நிலவியதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் பல பேர் மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), பெருங்களத்துரைச் சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் குமார் வர்ணம் (37), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) மற்றும் மரக்காணத்தைச் சேர்ந்த மணி ( 37) ஆகிய 5 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி காவல் நிலையம், மயிலாப்பூர் காவல் நிலையம், மெரீனா காவல் நிலையம், ராயப்பேட்டை காவல் நிலையம் என தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
காவல்துறை மூலம் 194 BNSS - இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உடற்கூராய்வு செய்யப்பட்டு பின் உடல்கள் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் உடற்கூராய்வில் உயிரிழப்புக்கான முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி,
பெருங்களூத்தூரை சேர்ந்த சீனிவாசன் - இதயத்தில் அடைப்புகள் இருந்ததாலும்,
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56) - Low BP மூலம் மயக்கம் ஏறப்பட்டதாலும்,
ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் குமார் வர்ணம் (37) - மாரடைப்பு காரணமாகவும்,
மரக்காணத்தைச் சேர்ந்த மணி ( 37) - மாரடைப்பு காரணமாகவும்,
உயிரிழந்திருப்பதாக உடற்கூராய்வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஐந்து நபர்களின் துல்லிய காரணத்தை கண்டறிய ஐந்து நபர்களின் உடல் உள்ளுறுப்பு சாம்பில்கள் தடயவியல் துறையின் "விஸ்ரா" ஆய்வுக்கும் காவல்துறை அனுப்பியுள்ளது.
அது என்ன விஸ்ரா ஆய்வு என்றால், viscera ஆய்வு என்பது முக்கியத்துவம் கொண்ட வழக்குகளில் மட்டுமே எடுக்கப்படும். ஒரு நபர் இறப்பு குறித்த விவரங்கள் பிரேத பரிசோதனையிலேயே பெரும்பாலும் தெரிந்துவிடும். அதைத்தாண்டிய துல்லியத்தன்மை கண்டறிய, உடல் உள்ளுறுப்பு, இறந்த நபரின் உடல் திரவங்கள் மற்றும் திசுக்களை ஆய்வு செய்து இறப்புக்கான துல்லிய காரணத்தை கண்டறிய மேற்கொள்ளப்படும் வழிமுறையாகும்.
"விஸ்ரா" ஆய்வின் முடிவில், பிரேத பரிசோதனையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் மட்டும்தான் இறப்புக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற துள்ளிய தகவல்கள் கிடைத்து விடுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.