தமிழ்நாடு

நான்கு மூதாட்டிகளில் உயிரை பலி கொண்ட கூட்ட நெரிசல்..வாணியம்பாடியில் உண்மையில் நடந்து என்ன?

நான்கு மூதாட்டிகளில் உயிரை பலி கொண்ட கூட்ட நெரிசல்..வாணியம்பாடியில் உண்மையில் நடந்து என்ன?

webteam

வாணியம்பாடியில் இலவச சேலைக்கான டோக்கன் வழங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு மூதாட்டிகள் உயிரிழந்தனர்.

தனியார் வழங்கும் இலவச சேலையை வாங்க குவிந்த மூதாட்டிகளுக்கு நேர்ந்த துயரம். சோகத்தில் உறைந்த பொதுமக்கள். துயரச்சம்பவம் நிகழ்ந்தது எப்படி? கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகருக்கு உட்பட்ட கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (50). இவர், கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு தைப்பூச விழாவின் போதும் பொதுமக்களுக்கு இலவச சேலை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு தைப்பூச விழாவிற்கும் சுமார் 1000 பெண்களுக்கு இலவச சேலை வழங்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நாளை (05.02.2023) ஞாயிற்றுக்கிழமை சேலை வழங்க இருப்பதாகவும் அதற்காக முன்கூட்டி இன்று சனிக்கிழமை டோக்கன் வழங்குவதாக பொதுமக்களுக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்திற்கு அருகே உள்ள ஐயப்பனுக்குச் சொந்தமான இடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பெண்கள் குவிய தொடங்கியுள்ளனர். இதையடுத்து மதியம் 2 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு இருப்பதை அறிந்த மற்ற பெண்களும் டோக்கன் வாங்க குவிந்துள்ளனர்.

காலாம் தாழ்த்தியதும் ஒரு காரணம்..

இதனால் நேரமாக ஆக கூட்டம் அதிகரித்துள்ளது. இருந்த போதும் டோக்கன் வழங்க இருப்போர் உடனடியாக டோக்கன் வழங்காமல் காலம் தாழ்த்தி கதவை திறந்துள்ளனர். கதவு மிக குறுகிய அளவில் இருந்ததாலும் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமானோர் முந்திஅடித்துச் சென்றுள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து மிதி பட்டுள்ளனர். கூடியிருந்த கூட்டத்தில் முதியவர்கள் அதிகம் இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும் படுகாயமும் அடைந்தனர்.

அனுமதி வழங்கப்பட்டதா? - காவல்துறை என்ன சொல்கிறது?

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் முதியோர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பெண்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயத்துடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலவச சேலை வழங்கும் நிகழ்விற்கு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், டோக்கன் வழங்குவது குறித்து காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாடின்றி கூட்டம் அலை மோதியதால் இந்த சோகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை காவல் துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தாலோ அல்லது பெண்கள் வர வர டோக்கன் வழங்கப்பட்டிருந்தாலோ இந்த பெரும் சோக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் இருந்தவர்களை வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமரகுஸ்வாகா, எஸ்பி.பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

கைது செய்யப்பட்ட தொழிலதிபர்!

இச்சம்பவம் தொடர்பாக இலவச சேலை வழங்க இருந்த தொழிலதிபரான ஐயப்பன் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் ஒருவர் வழங்கும் இலவச சேலையை வாங்கச் சென்ற மூதாட்டிகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன? - நேரில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி!

இதுகுறித்து பாதிக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண்கள் கூறுகையில், ”வாணியம்பாடியில் ஒருவர் இலவச சேலை தருவதாக எங்கள் ஊரில் பேசிக் கொண்டார்கள் அதற்காக நானும் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தோம் மதியம் முதல் டோக்கன் வழங்குவதாக கூறப்பட்ட இடத்தில் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகுதான் டோக்கன் வழங்கப்பட்டது. அதற்குள் அதிகமான ஜனம் கூடிவிட்டது. இதையடுத்து டோக்கன் வாங்குவதற்காக ஒருவர் மீது ஒருவர் முந்தி அடித்துப் போனோம். யாரும் கட்டுப்படவில்லை. கீழே விழுந்த எங்கள் மீது பலர் ஏறி மிதித்துச் சென்றனர். எங்களால் ஒன்றும் தாங்க முடியவில்லை” என கூறினார்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து கூறுகையில்... ”வாணியம்பாடியில் நடந்த இந்நிகழ்வு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஐயப்பனிடம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், வழக்குப் பதிவு செய்து ஐயப்பனை கைது செய்துள்ளோம், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவர் மீது 34 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்

இதைத் தொடர்ந்து உடனடியாக 4 பேர் குடும்பத்திற்கும் முதல்வர் நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு சார்பில் இறந்தவர் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது மேலும் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் 4 மருத்துவர் கொண்ட குழு 4 பிரேதங்களை பிரேத பரிசோதனை செய்து உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைத்தனர்