தொட்டில் குழந்தை திட்டம் முகநூல்
தமிழ்நாடு

அதிகரித்து வரும் பெண் சிசுக் கொலை! என்ன ஆனது ‘தொட்டில் குழந்தை திட்டம்?

பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தின் நிலை என்ன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.-

PT WEB

பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுவதும், குப்பையில் வீசப்படுவதும், இன்றும் தொடர்வது பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தின் நிலை என்ன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே, பெண்ணாகப் பிறந்த ஒரே ஒரு காரணத்துக்காக, வெறும் எட்டு நாளிலேயே, பெற்றோரால் விஷத்தன்மை கொண்ட பாலை புகட்டி, பெண் குழந்தை ஒன்று கொன்று புதைக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், சிஐடி நகரில், ஒரு பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன, ஆண் குழந்தை, கட்டைப்பையில் வைத்து முள்புதரில் வீசப்பட்டிருக்கிறது. பார்த்ததுமே அள்ளி அரவணைத்து கொஞ்சத் தோன்றும் குழந்தைகள், கொல்லப்படுவதையும், குப்பையில் வீசப்படுவதையும் தடுக்க முடியாதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

வளர்க்க முடியாத குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்திருக்கலாம் என்கிறார் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

ஆனால், அதிமுக அரசு கொண்டு வந்த இந்தத் திட்டம் முழுமையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பெண் குழந்தைகள் கொல்லப்படக் கூடாது என்ற உயரிய நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1992-ல் கொண்டு வந்த கனவுத்திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம்.

முதல்முறையாக சேலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர், தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன. வளர்க்க முடியாத பெண் குழந்தைகளை இந்தத் தொட்டிலில் விட்டு விடலாம்.

இந்தக் குழந்தைகளை காப்பகங்களில் வைத்து அரசே பராமரித்தது. குழந்தை இல்லாத தம்பதிகள், சட்டப்படி தத்தெடுத்துக் கொண்டனர். தொட்டில் குழந்தைத் திட்டம் அமலான பிறகு, பெண் சிசுக் கொலைகள் வெகுவாகக் குறைந்தன.

தொட்டில் குழந்தை திட்டத்தைப் போற்றும்விதமாக, 1995-ல் ராம்கி - ரஞ்சிதா நடிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தொட்டில் குழந்தை என்ற திரைப்படமே வெளியானது.

தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் 2002 முதல் 2008 வரையிலான 6 ஆண்டுகளில் 1129 குழந்தைகள், தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன. காலப்போக்கில் தொட்டில் குழந்தை திட்டத்தை மக்கள் மறந்துவிட்டனர்.

முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த தொட்டில்களும் மாயமாகின. ஆட்சிகளும், காட்சிகளும் மாறிமாறி வந்தாலும் பச்சிளம் குழந்தைகள் வீதியிலும் குப்பைமேட்டிலும் புதர்களிலும் வீசப்படும் அவலங்கள், தொடர்கின்றன. இந்த சம்பவங்களே, தொட்டில் குழந்தை திட்டம் கைவிடப்பட்டு விட்டதா என்ற கேள்வியை வலுவாக எழுப்புகின்றன.

இதுபற்றி கேட்டபோது, தொட்டில் குழந்தை திட்டம், சில மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டிருப்பதாக சமூகநலத்துறை அதிகாரிகள் கூறினர். வளர்க்க முடியாத பச்சிளம் குழந்தைகளை, பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும், அரசிடம் ஒப்படைக்கலாம்.

ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை, குழந்தைகளை ஒப்படைக்கும் மையங்களாக செயல்படுகின்றன.

கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால்கூட போதும், குழந்தைகள் அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்த நடைமுறை எளிதுதான். ஒப்படைக்கப்படும் குழந்தைகள், மாவட்ட குழந்தைகள் நல குழுமம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அரசு நேரடி கண்காணிப்பில் பிரத்யேக இல்லங்களில் பராமரிக்கப்படுகின்றனர்.

தொட்டில் குழந்தைத் திட்டம் மேம்படுத்தப்பட்ட வடிவில் செயல்பாட்டில் இருப்பதை அறிய முடிகிறது. அதே நேரத்தில் அதுகுறித்து விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படுவதையும், சிசுக்கொலையையும் தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டியது அவசியமாகிறது.