தமிழ்நாடு

துப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? - நீதிமன்றம் கேள்வி

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100வது நாள் அன்று கலவரம் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறையினர் என்ன வகையான துப்பாக்கிகளை பயன்படுத்தினர்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடந்த போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 99 நாட்கள் நடந்த போராட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.