சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் pt web
தமிழ்நாடு

உருவானது புதிய ஒருங்கிணைப்புக் குழு.. கிரீன் சிக்னல் காட்டிய OPS, சசிகலா; EPS என்ன செய்ய போகிறார்?

அதிமுக ஒருங்கிணைப்பு குழு முயற்சிக்கு சசிகலா, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவு கிடைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்கள்? மீண்டும் ஒன்றிணையுமா அதிமுக? ஆயிரம் கேள்விகளுக்கு பதில்தான் என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

உருவான அதிமுக ஒருங்கிணைப்புக்குழு

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஒவ்வொரு தேர்தலுக்குக்கும், அந்தக் கட்சிக்குள் சிறு சிறு சலசலப்புகள் உண்டாவது இயற்கை. 2019, 2021 தேர்தல் முடிவுகள் வெளியான போது, ‘கட்சியின் தலைமை இரட்டைத் தலைமையாக இருப்பதுதான் தோல்விக்குக் காரணம், ஒற்றைத் தலைமை இருந்தால் எல்லாம் சரியாகும்’ என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ‘இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி என அனைவரும் தனி அணியாக இருப்பதுதான் தோல்விக்குக் காரணம். அனைவரும் ஒன்றிணைந்தால் இனி வெற்றிப்பாதை நிச்சயம்’ என்கிற குரல் எழுந்திருக்கிறது. வழக்கமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் குரலுக்கு இந்தமுறை அமைப்பு வடிவம் கொடுத்திருக்கின்றனர் மூன்று பேர்.

அனைவரையும் ஒன்றிணைக்க, ‘அதிமுக ஒருங்கிணைப்புக்குழு’ என்ற ஒரு குழுவையும் ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களில் ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூர் புகழேந்தி இருவரும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். கே.சி.பழனிசாமி எந்த அணி சார்ந்தும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் தனித்து செயல்பட்டு வருபவர்.

கடந்த காலத்தில் என்ன நடந்தது? தற்போது நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தயவில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். தொடர்ந்து சசிகலா சிறைக்குச் செல்ல, அங்கிருக்கும்போதே கட்சியிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். டிடிவி தினகரனும் தனியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவர் கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றார். அதே தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதில் தினகரன் பிரித்த வாக்குகளால், இரண்டு நாடாளுமன்றத் தொகுதியிலும் நான்கு சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பறிபோனது. அப்போதே, ‘அதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படவேண்டும். தனித்தனியாக இருப்பதால் திமுகவுக்கே லாபம்’ என லேசாகக் குரல்கள் எழுந்தன.

சூளுரைத்த நிலையில் முயற்சியே எடுக்காத சசிகலா

தொடர்ச்சியாக, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர, எடப்பாடி பழனிசாமியிடம், டெல்லி பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், “தனியாகவே ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பிடித்துவிடலாம்” என நம்பிக்கையோடு இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மொத்தமாக, 75 இடங்களை மட்டுமே அதிமுக கூட்டணியால் பெற முடிந்தது.

கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் அமமுகவின் வாக்குப் பிரிப்பால், அதிமுகவின் வெற்றி பறிபோனது. தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்து, அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவதுபோன்ற ஆடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஆரம்பத்தில் பகுதி அளவிலான நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோக்கள் வெளிவந்தநிலையில், கடைசியாக முன்னாள் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்களோடு உரையாடும் ஆடியோக்கள் வெளியாகின. அப்படி வெளியான ஆடியோக்களில் பெரும்பாலும், “நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்” என சூளூரைத்திருந்தார் சசிகலா. ஆனால் பெரியளவில் எந்தவொரு முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அதில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. சட்டமன்றத் தேர்தலுக்குச் செலவு செய்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலைக் கண்டுகொள்ளவில்லை. அதாவது, கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை எடப்பாடி கைவிட்டுவிட்டார் என்கிற குரல்கள் எழத் தொடங்கின. அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஒ.பி.எஸ், தொண்டர்களைச் சந்திப்பது, நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என தனியாக சில செயல்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்.

அதேவேளை, அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பி.எஸ்-க்கும் இடையே முட்டல் மோதல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. எம்.எல்.ஏ சீட்டுக் கொடுப்பது, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், அவைத்தலைவர் என தொடர்ந்து ஓ.பி.எஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து, பிப்ரவரியில் நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. அதற்குப் பிறகும் அதிமுகவுக்குள் மீண்டும் பூகம்பம் வெடித்தது.

“இ.பி.எஸ், ஒ.பி.எஸ் இருவருமே சரியில்லை; இந்த நேரத்தில் துணிச்சலான ஒருவர்தான் தலைவராக வரவேண்டும் அதனால் சசிகலா தலைமையேற்க வேண்டும்” என்கிற குரலும் ஒருசில இடங்களில் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓ.பி.எஸ்ஸும், “எனக்குத் தனிப்பட்ட முறையில் சின்னம்மா அவர்கள்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு” என பாசமழை பொழிய, மீண்டும் கட்சிக்குள் பூகம்பம் வெடித்தது. உட்கட்சித் தேர்தலின்போது அது இன்னும் பூதாகரமானது. தன் பங்காக 50 சதவிகித நிர்வாகிகளை நியமனம் செய்யவேண்டும் என ஓ.பி.எஸ் கோரிக்கை விடுக்க விரிசல் அதிகமானது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்

ராஜ்யசபா இடம் தொடர்பாகவும் ஓ.பி.எஸ்ஸுக்கும் இ.பி.எஸ்ஸுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்னை எழுந்தது.., ஒரு கட்டத்தில், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய ஒப்புக்கொள்ளாததால், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. தேமுதிக, எஸ்.டி.பி.ஐயுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது அதிமுக. மறுபுறம், டிடிவி, தினகரனும் ஓ.பி.எஸ்ஸும் ஒன்றாகப் பயணிக்க ஆரம்பித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒன்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தனர். அவர்களும் தோல்வியையே தழுவினர். தேர்தல் தோல்வியின் காரணமாக அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, செங்கோட்டையன் இடையே கருத்து மோதல்கள் உண்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதை அடியோடு மறுத்தனர் அதிமுக முன்னணித் தலைவர்கள்.

சசிகலா ஓபிஎஸ் ஆதரவு

மறுபுறம், ஓ.பி.எஸ், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்” என அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல சசிகலாவும், “கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் 'ஜெயலலிதா இல்லம்' அன்புடன் வரவேற்கிறது” என அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், அதிமுக தரப்பில் இரண்டுக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களே கே.பி.முனுசாமியின் வழியாக வந்தது. தொடர்ந்து தற்போது, ஓ.பி.எஸ் அணியில் பயணித்து வந்த ஜே.சி.டிபிரபாகர், பெங்களூர் புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஒன்று சேர்ந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியிருக்கின்றனர்.

எடப்பாடி, ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி ஆகியோரைச் சந்தித்து ஒன்றிணைய பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த ஒருங்கிணைப்பு முயற்சிக்கு சசிகலா, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவு கிடைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்கள், அதிமுக மீண்டும் ஒரே அணியாக மாறுமா இல்லை ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், எழுந்து அடங்கும் வழக்கமான புஸ்வானமாக அடங்கிப் போகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..,