இந்தியன் 2 புதிய தலைமுறை
தமிழ்நாடு

“இந்தியன் படம் எடுக்கும் போது இதையெல்லாம் நான் நினைக்கல” - சேனாதிபதி வயது குறித்து இயக்குநர் ஷங்கர்!

டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996 ல் வெளிவந்து மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் டைரக்டர் ஷங்கர் இறங்கியுள்ளார்.

Jayashree A

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டோர் படத்திற்கான புரமோஷன் நிகழ்வுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியன் 2 தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டைரக்டர் ஷங்கரிடம், “இந்தியன் 2 ல் சேனாபதி தாத்தாவிற்கு என்ன வயசு இருக்கும்?” என்ற சந்தேகத்தை எழுப்பிய நிலையில், இது குறித்து சங்கர் பேசும் பொழுது,

நான் இந்தியன் படம் எடுக்கும்பொழுது இந்தியன் 2 எடுப்பேன் என்று நினைக்கவில்லை. இந்தியன் 1 எடுக்கும் பொழுது சேதுபதியை பற்றி போலிசார் தகவல் சேகரிக்கும் பொழுது, அவரின் தேதியை போடவேண்டிய ஒரு நிர்பந்தம் எழுந்தது. அதனால் அவரின் வயதை அதில் சொல்லியிருப்பேன். ஆனால் இத்தனை வருடம் கழித்து இந்தியன் 2 எடுப்பேன் என்று நினைக்கவில்லை. அதனால், இப்பொழுது சேதுபதியின் வயது கிட்டத்தட்ட 110 க்கும் மேல் இருக்கும். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சைனாவில் லூசிஜியான் என்ற ஒரு கிராண்ட் மாஸ்டர் ஒருவர் இருந்தார். அவருக்கு 118 வயசு... ஆனாலும் அந்த வயதிலும் அவர் மிகவும் ஆக்டிவாக, பறந்து பறந்து அடிக்கக்கூடிய திறமைமிக்க கிராண்ட் மாஸ்டராக இருந்தார். அதே போல்தான் சேனாபதியும் வர்மக்கலையில் ஒரு கிராண்ட் மாஸ்டர். இவரிடம் வாழ்க்கையின் ஒழுக்கம், உணவு கட்டுப்பாடு ஆகியவை இருக்கும், ஆகவே இந்தியன் 2 ல் சேனாபதி தாத்தாவும், முன்பை போன்று பறந்து சண்டை போடுவார்” என்று கூறியிருக்கிறார்.

ஆக... இந்தியன் 2ல் இந்தியன் தாத்தா பறந்து சண்டை போடுவது மட்டுமல்ல... தகவல் தொழில் நுட்பத்திலேயும் அப்டேட்டாக இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...