பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ - ரூட்டை மாற்றுகிறாரா ராமதாஸ்? முகநூல் பதிவின் பின்னணி என்ன?

வழக்கமாகப் பொங்கலுக்கு முந்தைய நாளான போகிக்கு வாழ்த்துச் சொல்லப் பயன்படுத்தப்படும் வாசகத்தை, தீபாவளிக்குப் பின்னால் பயன்படுத்தியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். என்ன நடக்கிறது? விரிவாகப் பார்ப்போம்.

இரா.செந்தில் கரிகாலன்

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே"

- என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முகநூலில் இட்ட பதிவு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகிள்ளது.

கூட்டணி மாறப்போகிறதா பாமக என்கிற கேள்வியையும் அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளது. வழக்கமாகப் பொங்கலுக்கு முந்தைய நாளான போகிக்கு வாழ்த்துச் சொல்லப் பயன்படுத்தப்படும் வாசகத்தை, தீபாவளிக்குப் பின்னால் பயன்படுத்தியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். என்ன நடக்கிறது? விரிவாகப் பார்ப்போம்.

ராமதாஸ்

தமிழ்நாட்டில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் அரசியல் தலைவர்களுள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸும் ஒருவர். முகநூலில் நிகழ்கால சம்பவங்களுக்கு எதிர்வினையாக காட்டமான அறிக்கைகள் மட்டுமின்றி, வரலாற்றுத் தகவல்கள், அவரின் கடந்த கால நினைவுகள், திரைப்பட விமர்சனங்கள் என எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். அதுமட்டுமல்ல, தான் சொல்ல நினைக்கும் விஷயங்களை சூசகமாக, திரைப்பட பாடல்கள், வசனங்கள் அல்லது வரிகள் மூலமாகவும் அவ்வப்போது வெளிப்படுத்துவது வழக்கம்.

உதாரணமாக 2022 நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது பாமக. ஆனால், அப்போது லோக்கல் நிர்வாகிகள் திரைமறைவில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பல்வேறு இடங்களில் போட்டியிட முடிவு செய்தனர். அதனைக் கண்டிக்கும் விதமாக 'Local understanding' கூடாது என்கிற அர்த்தத்தில், ஆங்கிலத்தில் பதிவாக வெளியிட்டிருப்பார் மருத்துவர் ராமதாஸ். அதேபோல, தனது 85-வது பிறந்தநாளை முன்னிட்டு, ”நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதை விட சிறந்த மகிழ்ச்சி இல்லை... நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் அதை நினைத்து முடங்கி விடத் தேவையில்லை.

மருத்துவர் ராமதாஸ்

'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்'

- என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப வெற்றிகளை சாத்தியமாக்க அனைவரும் கடுமையாக உழைப்போம்; அரசியல் இலக்கை அடைவோம் என்று அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். அதாவது, `தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?’ என்கிற கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலாக இதைப் பகிர்ந்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

அதேபோல்தான் தற்போதும், பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்க நூலான நன்னூலில் இடம்பெற்றுள்ள "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" எனப் பதிவிட்டிருக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட பாமக, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாற முடிவு செய்துவிட்டது. அதற்கான அச்சாரமாகவே மருத்துவர் ராமதாஸ் இப்படிப் பதிவு செய்திருக்கிறார் என்கிற தகவல்கள் பேசுபொருளாகி இருக்கின்றன. அதிமுக அல்லது விஜய்யுடன் பாமக கூட்டணி அமைக்கப்போகிறது என்கிற செய்திகளும் வெளியாகியிருக்கின்றன.

மருத்துவர் ராமதாஸ்

பாமக-வினர் சொல்வதென்ன?

``ஐயாவின் பதிவை வைத்து நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி வேறு கூட்டணிக்கு மாறப்போகிறோம் எனப் பலர் பேசிவருகிறார்கள். அதிமுக தொடங்கி விஜய் வரைக்கும் பல்வேறு யூகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கூட்டணி குறித்து யோசிப்போம். அதைப் பற்றிப் பேசுவோம்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி குறித்தெல்லாம் முடிவெடுத்திருக்க மாட்டார் ஐயா. கட்சியின் கட்டமைப்பை மாற்றி வருகிறோம். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் எல்லாம் கட்சிக் கட்டமைப்பு அடியோடு கலைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல மாவட்டங்களிலும் மாற்றங்கள் வரவிருக்கின்றன. உட்கட்சி நிர்வாகிகள் நியமனத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதற்கான ஒரு பதிவாகத்தான் இதைப் பார்க்கமுடியும்’’ என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!