உயர்நீதிமன்றம், செந்தில்பாலாஜி file image
தமிழ்நாடு

“அதிகாரிகளை மிரட்டும் தொணியில் செந்தில் பாலாஜி நடந்துகொண்டார்”- நீதிமன்றத்தில் ED சொன்னது என்ன?

அமலாக்கத் துறையினரால் தனது கணவர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

webteam

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்த மனு ஜூன் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மேகலா தரப்பில், “உரிய நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்ததும், கைதுக்கான காரணங்களை தெரிவிக்காததும் சட்டவிரோதம் என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. என் கணவரை சட்டவிரோதமாக கைது செய்தது மட்டுமல்லாமல், இயந்திரத்தனமாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும். அதன்பின் எந்த காரணங்களுக்காகவும், காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. அதன் காரணமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக சேர்க்கக் கூடாது என அமலாக்கத்துறை வலியுறுத்துகிறது. ஆனால், அதை ஏற்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக ஜூன் 27ஆம் தேதிக்கு இன்று (செவ்வாய்) வழக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுவும், மேகலா தரப்பில் கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை தனது பதில் மனுவில், "அதிகாரிகளை மிரட்டும் தொணியில் செந்தில் பாலாஜி நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்தோம். சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப தேவையான அனைத்தும் இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் உள்ளன.

கைதின் போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

ஆனால் மேகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனுவில், “அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்ற அடிப்படையில் என் கணவருக்கு எதிராக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளார். 2022 ஆகஸ்ட் முதலே, மத்திய அமைப்பால் என் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருகிறார் அவர்.

செந்தில் பாலாஜி - அண்ணாமலை

அமலாக்கத்துறை பஞ்சநமாவில் ஜூன் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாக குறிப்பிட்டுள்ள நிலையில், நள்ளிரவு 1.39 மணிக்குதான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதனால் சட்டவிரோத கைது உத்தரவில் இருந்து என் கணவர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

இவற்றில் மேகலாவின் ஆட்கொணர்வு மனுவானது நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்றைய பட்டியலில் 3-வது வழக்காக இடம்பெற்றுள்ளது.