தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையாற்ற மக்கள் தயாராகி வரும் நிலையில், வாக்குச்சாவடி மையத்தில் என்னென்ன ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள "பூத் ஸ்லிப்" எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டை மட்டுமே வைத்து வாக்களிக்க முடியாது. "பூத் ஸ்லிப்" இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதே பிரதானம். வழக்கமாக வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 வகையான ஆவணங்களில் ஏதெனும் ஒன்றை அடையாள சான்றாக காட்டலாம்.
ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிக்கான அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம். மேலும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, தொழிலாளர் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட தொழிலாளர் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க கொண்டு செல்லலாம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பூத் ஸ்லிப்புடன் தங்களின் அலுவலக அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். முக்கியமாக முகக் கவசத்தை கட்டாயம் அணிந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.