தமிழ்நாடு

பிப்ரவரி 1 முதல் தொலைக்காட்சி புதிய கட்டண முறை: சேனல்களை தேர்வு செய்வதெப்படி?

பிப்ரவரி 1 முதல் தொலைக்காட்சி புதிய கட்டண முறை: சேனல்களை தேர்வு செய்வதெப்படி?

webteam

தொலைக்காட்சி சேவைகளில் புதிய கட்டண முறை நாளை மறுநாள் அமலுக்கு வருகிறது. இதுநாள் வரை மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை தந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ‌வந்தவர்கள் இனி என்ன செய்ய வேண்டியிருக்கும் என்ற சந்தேகம் பலரிடத்திலும் எழுந்துள்ளது.

பிப்ரவரி 1 முதல் நாம் பார்க்க விரும்பும்‌ தொலைக்காட்சி சேனல்களை நாமே தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தலாம் என்ற புதிய நடைமுறை வர உள்ளது. இதன்படி, ஒவ்வொரு கேபிள் ஆபரேட்‌டரு‌ம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 100 இலவச சேனல்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படைக் கட்டணமாக மாதம் தோறும் 130 ரூபாய் மற்றும் அதற்கான 18 சதவிகித ஜிஎஸ்டி ‌வரி வசூலிக்கப்படும். புதிய தலைமுறை போன்‌‌ற சேன‌ல்கள் கட்டணமற்ற இலவச சேனல்கள் ‌என்பதால் அவை இந்த 100 இலவச சேனல்கள் பட்டியலில் இடம் பிடித்துவிடும். இவற்றை பார்க்க தனியே பணம் தரத் தேவையில்லை. இதுதவிர தூர்தூர்ஷனின் 25 சேனல்களும்‌ இந்த 100 இலவச சேனல்கள் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும். 

இந்த 100 சேனல்களுக்கு‌ மேல், விரும்பிய கட்டண சேனல்களைப் பார்க்க தனித்தனியாக ‌பணம் தர வேண்டியிருக்கும். கட்டண சேனல்கள் ஒரு சேனலு‌க்கு மாதமொன்றுக்கு அதிகபட்சம் 19 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளரிடம் இருந்து வாங்க வேண்டும் என அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. அடிப்படை தொகுப்பில் இடம்பெறும் 100 சேனல்களையும் அந்தந்த கேபிள் நிறுவனம் முடிவு‌ செய்யும் இந்த 100 இலவச சேனல்கள் தவிர கூடுதலாக‌ இலவச சேனல்களை மட்டும் பார்க்க விரும்பும் பட்சத்தில் மேற்கொண்டு ஒவ்வொரு 25 இலவச சேனல்களுக்கு 20 ரூபாய் என்ற விகிதத்தி‌ல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 

அதிகபட்ச கட்டணம் 19 ரூபாய் எ‌ன இருந்தாலும் மக்கள் ஆதரவை கருதி பல சேனல்கள் மாதம் ஒன்றுக்கு 10 காசு, 50 காசு கட்டணத்தைக்கூட சில சேனல்கள் நிர்ணயித்துள்ளன.‌ எனினும் ஒன்றிற்கு மேற்பட்ட சேனல்களை நட‌த்தும் நிறுவனங்கள் தனித்தனியாகவும் அனைத்து சேனல்களும் சேர்ந்த தொகுப்பாகவும் இரு‌வேறு கட்டணங்களை நிர்ணயித்துள்ளன. கட்டண சேனல்கள் எதுவும் தங்களுக்கு தேவையில்லை என்பவர்களுக்கு இலவச சேவை தரும் 100 சேனல்கள் மட்டும் 130 ரூபாய் கட்டணம் மற்றும் 18% ஜிஎஸ்டி செலுத்தினால் போதும். 

வாடிக்கையாளர்கள் தமது கேபிள் ஆபரேட்டர்கள் தரும் தொலைக்காட்சிகள் பெயர் கொண்ட பட்டியலில் இருந்து அவர்கள் தரும் 100 இலவச சேனல்களுடன் நமக்கு தேவையான கட்டண சேனல்களையும் தேர்வு செய்ய முடியும். கேபிள் மட்டுமின்றி இந்த மாற்றம் DTH சேவைகளுக்கும் பொருந்தும். பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது