தமிழ்நாடு

‘மினிமம் 100 உறுப்பினர்கள்’ - புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன?

‘மினிமம் 100 உறுப்பினர்கள்’ - புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன?

kaleelrahman

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியை பதிவு செய்ய வேண்டுமெனில் அந்த கட்சியில் குறைந்தது 100 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன.


கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள் இன்றி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் நீயா நானா என வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முதன் முதலாக தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல அரசியலுக்கு எப்ப வருவாரு எப்படி வருவாரு என் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரஜினிகாந்தும் அரசியல் கட்சியை தொடங்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில், கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்திபனுடன் செய்தியாளர் ரமேஷ் நடத்திய கலந்துரையாடலை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கு எந்த மாதிரியான விதிமுறைகள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது?

பதில்: புதிதாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த 30 நாட்களில் ஒரு விண்ணப்பத்தை போடவேண்டும். இந்த விண்ணப்பம் லெட்டர் பேடில் டைப் செய்தோ அல்லது கையால் எழுதியோ அதை தபால் மூலமாகவோ அல்லது யாராவது ஒருத்தர் மூலமாகவோ அதனுடன் 10,000 ரூபாய்க்கு மனு எடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுக்க வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது அந்த கட்சியில் குறைந்தது 100 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அந்த 100 உறுப்பினர்களும் வேறு எந்த கட்சியிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. அதேபோல உறுப்பினர்கள் அனைவருக்கும் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் என்பதற்காக அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பத்தை கொடுத்த பிறகு அடுத்து 30 நாட்கள் கழித்துதான் மற்ற வேலைகள் தொடங்கும். இது எதற்கு என்றால், பொதுமக்கள் யாராவது கட்சியின் மீது மறுப்பு தெரிவிப்பதாக இருந்தால் மறுப்பு தெரிவிக்கலாம். இந்த 30 நாட்கள் முடிந்த பிறகு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் அரசியல் கட்சி தாக்கல் செய்த டாக்குமெண்டுகளை சரிபார்த்த பிறகு அந்த கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் செயல்பாடுகள் தொடங்கும்.

தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவுசெய்ய விண்ணப்பத்தோடு அந்த கட்சி எந்த கட்டிடத்தில் இயங்குகிறது என்பதை சொல்ல வேண்டும். அதன்பிறகு அந்த கட்டிடத்தில் உரிமையாளர் தடையில்லா சான்று வழங்க வேண்டும். கட்சி ஆரம்பித்த பிறகு MOA (Memorandum of Association) AOA (Articals of Association) இதையெல்லாம் தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுக்க வேண்டும்.

அதேபோல யார் யாரெல்லாம் கட்சியின் நிர்வாக பொறுப்புகளில் இருக்கிறார்களோ அவர்களுடைய சொத்து மதிப்பு அவர்களது பிள்ளைகளின் சொத்து மதிப்பு இந்த சொத்துக்கள் எந்தெந்த இடங்களில் இருக்கிறது போன்ற விபரங்களோடு அவர்களது கிரிமினல் பேக்ரவுண்ட் என்ன என்பதையும் கொடுக்க வேண்டும்.

கேள்வி: ஏற்கெனவே 2018ல் ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றால் தேர்தல் அவசர காலங்களில் அந்த கட்சியை வேறு ஒருவர் எடுத்துக் கொண்டு அந்த கட்சிக்கு தலைவராக முடியுமா?

அரசியல் கட்சியை பதிவு செய்யும் போது தலைவர் செயலாளர் என இருந்தால் அதை நாம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கட்சி நிர்வாகிகள் அடிக்கடி மாறிக் கொண்டேதான் இருப்பார்கள் அதனால் பெரிதாக ஒன்றும் இல்லை தேவை என்றால் மாற்றிக் கொள்ளலாம்.