vijay pt
தமிழ்நாடு

சூடுபிடித்த களம்..தீவிரமாகும் கட்சிப் பணிகள்-வெற்றிவாகை சூடுவாரா விஜய்? முன்னிருக்கும் சவால்கள்என்ன?

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கொடியை அறிமுகப்படுத்துவது, மாநாடு நடத்துவது என்று முழு வீச்சில் இறங்கி இருக்கும் விஜய்க்கு பல சவால்களும் முன்னிருக்கின்றன.

யுவபுருஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சி பெயரிலேயே வெற்றியை வைத்து, தமிழக வெற்றிக் கழகம் என்று தொடங்கியவர், வெற்றியின் சின்னமாக இருக்கும் போர் யானைகள், வாகைப்பூவை தனது கட்சி கொடியில் வைத்துள்ளார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் காணும் விஜய், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும், இருந்த மக்கள் இயக்கத் தலைவர்கள் அந்த கட்சியின் நிர்வாகிகளாக மாறியுள்ளனர். மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் என்று கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் இவர், ஆகஸ்ட் 22ம் தேதி கட்சியின் கொடி, கொடி பாடலை வெளியிட்டார்.

அன்றே சமூகவலைதளங்களில் வைரலான கொடிக்கு, விமர்சனம் வரவேற்பு என இருவேறு கருத்துக்களும் கிடைத்தன. சிவப்பு, மஞ்சள் நிறத்தில் உருவாகியுள்ள கொடியில், இருபக்கமும் போர் யானைகள், வாகைப்பூ இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தங்கள் கொடியில் யானை இடம்பெற்றிருப்பது தேர்தல் ஆணைய விதிகளை மீறிய செயல். தேர்தலின்போது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. நீல நிறம் கொண்ட அக்கட்சியின் கொடியில் சாந்தமான நிலையில் யானையின் படம் இடம்பெற்றிருக்கும். இதனால், கட்சிக்குள் குழப்பம் வந்திவிடக்கூடாது என்று இதனை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்னைகளைக் கடந்து, மேலும் பல சவால்கள் தமிழக வெற்றிக் கழக தலைவருக்கு காத்திருக்கின்றன. ஆகஸ்ட் 22ம் தேதி கட்சி கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்ட விஜய், முதலில் 5 ஆயிரம் பேரை கூட்டி கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டார். ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டதால், நிர்வாகிகளை மட்டும் அழைத்து பனையூர் அலுவலகத்திலேயே வைத்து கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரப்போவதாக வெளியான செய்தி திசைதிருப்பும் முயற்சியாகவே இருப்பதாக விமர்சனத்திற்கு உள்ளானது. காரணம், அன்றைய தினம் பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சரவை மாற்றம் குறித்து தனக்கு தகவல் ஏதும் இல்லை என்று கூறியிருந்தார்.

கட்சிக் கொடி அறிமுக விழா இப்படி என்றால், மாநாட்டை எங்கு நடத்துவது என்று நீண்ட நாட்களாகவே இடம் பார்த்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள். மதுரையில்தான் முதல் மாநாடு என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் திருச்சி, சேலம் என்று பல இடங்களில் நடத்த இடம் பார்த்ததாக கூறப்பட்டது. இறுதியாக செப்டம்பர் மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக மாநாடு நடக்கும் என்று கூறப்படுகிறது. லட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு வருவார்கள் என்பதால், இடத்தை தேர்வு செய்வதில் சிக்கல் என்றாலும், அரசு தரப்பு தரும் அழுத்தமும் மாநாட்டுக்கு இடம் கிடைப்பதில் சிக்கலாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. ஆளும் கட்சி உட்பட எந்த கட்சி அழுத்தம் தந்தாலும், அத்தனையையும் சமாளித்து தொடர்ச்சியாக முழு வீச்சில் செயல்பட்டாலே அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தி கரையேற முடியும்.

ஒரு நடிகராக வெற்றிகரமாக கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், எந்த மாதிரியான கொள்கையை கையில் எடுக்கிறார் என்பதைப் பொருத்தே அவரின் எதிர்காலம் இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமை போன்ற கொள்கைகளை கொண்டதாலேயே 70 ஆண்டுகளைக் கடந்து திமுகவும், 50 ஆண்டுகளைக் கடந்து அதிமுகவும் இன்றளவும் ஆட்சி பீடத்தில் மாறிமாறி அமர்கின்றன. இதற்கும் மேலாக, ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் திமுக, அதிமுகவுக்கு தொண்டர்கள் இருக்கின்றனர்.

மறுபக்கம், அழுத்தமான கொள்கை இல்லாததால்தான் ஆரம்பத்திலேயே அசுர வேகத்தில் உச்சம் தொட்ட தேமுதிக போன்ற கட்சிகள், தொடர்ந்து சோபிக்க முடியாமல் திணறுகின்றன. தமிழ் தேசியத்தை கையில் எடுத்த சீமான், இன்றளவும் ஏறுமுகத்தில் இருக்கிறார். ஆக, சமீபத்திய களநிலவரத்தை பார்த்தாலும், எந்த காலமானாலும் கட்சிக்கு, கொள்கைதான் உயிர்நாடி.

இதனால், பிரமாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கும் விஜய், வலுவான கொள்கையை கையில் எடுக்க வேண்டும். சுற்றுப்பயணம் சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும், தொகுதியிலும் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு செயல்பாட்டால் பதில் கொடுக்க வேண்டும்.

நடைபயணம், பேரணி, போராட்டம் என்று கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள போர் யானைகளின் குணத்தை வெளிப்படுத்த வேண்டும். கட்சிக்கு முறையான விதிமுறைகளை வகுத்து, பழுத்த அரசியல் நிபுணர்களை ஆலோசகராக வைத்துக்கொண்டு வளர வேண்டும். இவை அனைத்தையும் செய்வதுதான் விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.