தமிழ்நாடு

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?

Sinekadhara

ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விழாவில் என்னென்ன திட்டங்கள் தொடங்கிவைக்கப்படவுள்ளது, யாரெல்லாம் பங்கேற்கவுள்ளனர்?

பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னைக்கு வருகை புரியவுள்ளார். பிற்பகல் 3.55 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள பெகும்பெட் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஐ.ஏ.எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு வந்து இறங்கவுள்ளார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அவர் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அன்றிரவே டெல்லிக்கு செல்கிறார். சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

என்னென்ன திட்டங்கள்?

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் தமிழகத்திற்கான ரூ.31 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்கள் எவையெனில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, ரயில்வே துறை ஆகிய அரசுத் துறைகள் சம்பந்தப்பட்டவை ஆகும். அவற்றில் 5 திட்டங்கள் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள திட்டங்களாகும். மற்ற 6 திட்டங்கள், இனி தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களாகும்.

பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கும் 5 திட்டங்களின் மதிப்பு ரூ.2,900 கோடியாகும். அவை, 75 கி.மீ. நீளமுள்ள மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டம்; தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. நீளமுள்ள 3-வது ரயில் பாதை திட்டம்; 115 கி.மீ. நீளமுள்ள எண்ணூர் - செங்கப்பட்டு பகுதிக்கான இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்; 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர் - பெங்களூரு பகுதிக்கான இயற்கை எரிவாயு பதிக்கும் திட்டம்; லைட் ஹவுஸ் திட்டத்தில் கட்டப்பட்ட1,152 வீடுகள் ஆகியவையாகும்.

அடிக்கல் நாட்டும் 6 திட்டங்கள்

பிரதமர் அடிக்கல் நாட்டி வைக்கும் திட்டங்களின் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 500 கோடியாகும். அவை, ரூ.14 ஆயிரத்து 870 கோடி செலவில் பெங்களூரு - சென்னை இடையே 262 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள விரைவுச் சாலை திட்டம்; சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு கொண்ட 4 வழி உயர்மட்ட சாலை திட்டம்; நெரலூரு - தருமபுரி பகுதியில் 4 வழி நெடுஞ்சாலை; மீன்சுருட்டி - சிதம்பரம் பகுதியில் 2 வழி நெடுஞ்சாலை; சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில்வே நிலையங்களை மறுசீரமைக்கும் பணி; சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் வகையில் சென்னையில் அமைக்கப்படவுள்ள ’மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்’ ஆகியவையாகும்.

இந்தத் திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.