தமிழ்நாடு

மின் வாரியத்தை மேம்படுத்த ராஜேஷ் லக்கானி முன்நிற்கும் சவால்கள் - ஒரு பார்வை

மின் வாரியத்தை மேம்படுத்த ராஜேஷ் லக்கானி முன்நிற்கும் சவால்கள் - ஒரு பார்வை

EllusamyKarthik

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மான கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ராஜேஷ் லக்கானி. அந்த துறையை மேம்படுத்த அவர் சந்திக்க வேண்டிய சவால்கள் என்ன? அவர் முன் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா ராஜேஷ் லக்கானி?

நிதி பற்றாக்குறை. கிடப்பிலுள்ள திட்டங்கள். அறிவிப்போடு நின்றுவிட்ட புதிய திட்டங்கள் என பல சவால்களுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ராஜேஷ் லக்கானி. இவற்றோடு மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பும் இவரிடமுள்ளது. 2014ஆம் ஆண்டு எரிசக்தித்துறை செயலாளராக ராஜேஷ் லக்கானி இருந்த போதுதான் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அந்த அனுபவம் அவருக்கு தற்போது கைகொடுக்கும் என்றாலும், இத்தகையை பெருந்தொற்று காலத்தில் ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் மின்வாரியம் மேலும் சரிவடைந்து விடாமல், மக்களும் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டியது லக்கானி முன் உள்ள மிகப்பெரிய சவால்.

நிதிநிலைமையை சரிசெய்வதோடு, பல ஆண்டுகளாக கிடப்பிலுள்ள அனல்மின் நிலைய திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டியதும் கட்டாயமாகியுள்ளது, வட சென்னையில் 600 மெகாவாட் உற்பத்தி திறனுடன் தொடங்கப்பட்ட அனல்மின் நிலையத்தில் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. இதோடு மேட்டூர் அனல் மின்நிலையத்தையும் மேம்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட பல அனல்மின் நிலைய திட்டங்கள் 10ஆண்டுகளுக்கு மேலாக காகித அளவிலேயே உள்ளன. இதனால் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தனியாரிடம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யவேண்டியுள்ளது.

கடந்த மாத மின் தேவை மட்டும் 16ஆயிரத்து 845 மெகாவாட், இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தகையை சூழலில் மின் உற்பத்தியை அதிகரித்து தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் அளவை குறைத்துக்காட்ட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு லக்கானியிடம் உள்ளது.

மின்பகிர்மான இழப்புகள், ஒரு லட்சம் கோடிக்கு மேல் உள்ள கடன் , தனியார் மின் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 16ஆயிரத்து 209 கோடி போன்றவையும் தமிழ்நாடு மின்சார வாரிய புதிய தலைவருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். தற்போது பொதுமுடக்க நடைமுறைகளால் பல தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கும் நிலையில் பலத்த வருவாய் இழப்பு ஏற்படும். இவை எல்லாவற்றையும் தனது நீண்ட கால அனுபவத்தால் கடந்து சாதனையாளராக வேண்டியது ராஜேஷ் லக்கானியின் கடமை.