முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

கடந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்னென்ன?

PT WEB

செய்தியாளர்: ஸ்டாலின்

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்க செல்கிறார். அங்கு பல முன்னணி நிறுவன தலைவர்களை அவர் சந்தித்து பேசவுள்ள நிலையில், இதற்கு முன் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கொண்டுவரப்பட்ட முதலீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். முதலமைச்சரின் பயணத்திற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்கும் வகையில் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தொழிற்துறை மற்றும் தமிழ்நாடு Guidance அமைப்பின் அதிகாரிகள் ஏற்கனவே அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். மொத்தம் 17 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

அமெரிக்காவில் முதல்வரின் பயணத்திட்டம்

முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு என்று முடிவு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்றுள்ளன.

சென்னையில் இருந்து நாளை (ஆக. 27) அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர், 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். அங்கு 29ஆம் தேதி நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் (investors conclave) பங்கேற்கிறார். தொடர்ந்து, 31ஆம் தேதி அமெரிக்க தமிழ்ச் சங்கங்களை சேர்ந்தவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

செப்டம்பர் 2ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர், செப்டம்பர் 7ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டுவாழ் தமிழர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும் அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். இந்த பயணத்தின்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளையும் முதலமைச்சர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 12ஆம் தேதி முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

இதுமுன் சென்ற வெளிநாட்டு பயணங்கள் 

முதலமைச்சரின் இந்த அமெரிக்க பயணத்தின்போது உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இந்த வெளிநாட்டு பயணங்களின்போது எவ்வளவு முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பதை பார்க்கலாம்...

2022 மார்ச் மாதம் துபாய்க்கு முதலமைச்சர் 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

55% வரை செயல்பாட்டுக்கு வந்த ஒப்பந்தங்கள்

2023 மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றபோது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினுக்கு 8 நாள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் சென்றபோது, ரூ.3,440 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடி, எடிபான் நிறுவனம் ரூ.540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்தன.

முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட இந்த வெளிநாடு பயணங்களில், கையெழுத்தான தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 55 விழுக்காடு வரை செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தொழிற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.