முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி pt web
தமிழ்நாடு

அமைச்சரவை: அக்டோபரில் நிச்சய மாற்றம்? 2 அமைச்சர்கள் நீக்கம்? யாருக்கு என்ன துறை? துணை முதல்வர் யார்?

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரும் இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஸ்டாலின்

இதுவரை 4 முறை நடந்த அமைச்சரவை மாற்றம்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் அண்மை நாட்களாக அரசல்புரசலாக வெளியாகி வந்தாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 24 ஆம் தேதி அளித்த பேட்டியின் மூலம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும், கூடுதல் சுவாரஸ்யமாக அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரும் இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது. முதலமைச்சர் டெல்லி பயணத்திற்குப்பின் அமைச்சரவை மாற்றத்தை அறிவித்து பதவியேற்புக்கான நிகழ்ச்சியை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

mk stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பின் 4 முறை இதுவரை அமைச்சரவையில் மாற்றங்கள் நடந்துள்ளன. 2022 ஆம் ஆண்டு அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டு அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டதுதான் முதல் மாற்றம்.

2ஆம் முறை நடந்த மிகப்பெரிய இலாகா மாற்றம்

அதன் பின்னர் சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம் எல் ஏவான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2022 டிசம்பர் 19ஆம் தேதி பதவியேற்றார். அந்த மாற்றத்தின் போதே அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டன.

உதயநிதி ஸ்டாலின்

அடுத்த 6 மாதத்திற்கு உள்ளாகவே 2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சரவை மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையை கவனித்து வந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டது.

உதயநிதிக்கு துணை முதலமைச்சர்

2023 ஜூன் 14 செந்தில் பாலாஜி கைதுக்கு பின், அவர் வசம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்தார். ஜாமீன் தொடர்பான வழக்கு தொடர்ந்த நிலையில் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி 2024 பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு கடிதம் எழுதியதை அடுத்து அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தமிழக அமைச்சரவை

இப்போது மீண்டும் அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான முடிவில் முதலமைச்சர் உள்ளார். அக்டோபர் முதல் வாரத்தில் செய்யப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி நிச்சயம். அதேநேரத்தில் 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பேசப்படுகிறது.

அந்த வகையில் செந்தில்பாலாஜிக்கு அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மீண்டும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. ஆவடி சா.மு.நாசர் மீண்டும் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளது. இது தவிர சேலம் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அமைச்சர் பட்டியலில் உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. தவிர நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக மற்றொரு துறையும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டவர்களின் இலாகாக்களில் மாற்றம் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.