விதிகளை மீறிய ‘வாழும் கலை’ அமைப்பின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில் நடைபெறவிருந்த தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தரப்பில், தஞ்சை பெரிய கோயில் தேவஸ்தானம் மற்றும் தொல்லியல்துறை தரப்பில் அனுமதி பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கில் நேரில் ஆஜரான தொல்லியல்துறை உதவி பாதுகாவலர் தரப்பில், பஜனை நடத்தவே அனுமதி வழங்கியதாகவும் பந்தல் போடவோ, தியான நிகழ்ச்சிகளை நடத்தவோ அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
விதிகளை மீறிய ‘வாழும் கலை’ அமைப்பின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தொல்லியல் துறையிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் தஞ்சை பெரிய கோயில் தேவஸ்தான இணை ஆணையர், மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பு பொறியாளர், ‘வாழும் கலை’ அமைப்பிற்கு அனுமதி வழங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.