தமிழ்நாடு

‘என் வாழ்க்கையே போச்சு’-காதல் திருமணம் செய்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்!

‘என் வாழ்க்கையே போச்சு’-காதல் திருமணம் செய்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்!

webteam

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண், தன் கணவரின் செயலால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவருபவர் ராஜேஷ்(26). இவர் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வருடமாகியும் குழந்தை இல்லை. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அதனை குறைப்பதற்கு கனிமொழி உடற்பயிற்சி கூடத்தை நாடியுள்ளார்.

இதனிடையே கணவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழி சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். அப்போது சில நாட்கள் சோகத்தில் இருந்த கனிமொழியிடம், ஜிம் மாஸ்டர் யோகேஷ் கண்ணா என்ன ஆனது என விசாரித்துள்ளார். அதற்கு தனது கணவன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும், தனக்கு ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட யோகேஷ் கனிமொழியை மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கவைக்க ஏற்பாடு செய்த பின்னர் அங்கு வருமாறு அழைத்துள்ளார். உடனே கனிமொழியும் கணவரை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதனை அறிந்த கணவர் ராஜேஷ், கனிமொழியை வெளியில் செல்ல விடாமல் தடுத்துள்ளார். இதனால் யோகேஷ் கண்ணா தனது நண்பர்கள் உதவியுடன் வீட்டில் இருந்த மனைவி கனிமொழியை அழைத்து சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து மனைவி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாட்களுக்குப் பிறகு யோகேஷ் கண்ணா செல்போனில் ராஜேஷிடம் தொடர்புகொண்டு கனிமொழியின் கல்வி சான்றிதழ்கள், ஜாதகம் உள்ளிட்டவைகளை தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் ராஜேஷ் காவல்நிலையத்தில் தனது மனைவி, ஜிம் மாஸ்டருடன் நகைகள் மற்றும் பணத்துடன் ஓடி விட்டதாக புகார் ஒன்றை அளித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜேஷுடன் வாழ பிடிக்கவில்லை எனவும் தனக்கு விவாகரத்து பெற்று தரவேண்டும் எனவும் கனிமொழி கூறியதை தொடர்ந்து போலீசார் கனிமொழியை விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தனது கணவர் தன்மீது அவதூறாக புகார் தெரிவித்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது கணவரின் தொந்தரவு தாங்கமுடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். தற்போது விடுதியில்தான் தங்கியுள்ளேன். என்னை எனது ஜிம் மாஸ்டருடன் இணைத்து வைத்து தவறாக புகார் கூறி வருகிறார். என்னை மட்டுமல்லாமல் எனது பெற்றோர் பெயரையும் அசிங்கப்படுத்தி வருகிறார். எனது சான்றிதழ்களை தர மறுப்பதால் எந்த வித அரசு வேலை உள்ளிட்ட பணிகளுக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை. ஊடகங்களில் எனது புகைப்படம் வெளியானதால் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது தனித்து விடப்பட்ட நிலையில் இருக்கிறேன். இதிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறேன் என்று தெரியவில்லை. அவனை சும்மாவிட மாட்டேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். என் வாழ்க்கையே போச்சு. எனது கேரியரை ஸ்பாயில் பண்ணிட்டான்” எனத் தெரிவித்துள்ளார்.


பெண்கள் காதல் என்ற பெயரில் அவசரமாக எடுக்கும் சில முடிவுகளால் குடும்பங்களை இழந்து ஆதரவற்ற நிலையில் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது இச்சம்பவம் மூலம் தெரியவருகிறது. கனிமொழியின் பெற்றோர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கனிமொழியின் எதிர்பார்ப்பாக உள்ளது.