Rain update PT Web
தமிழ்நாடு

‘சென்னைக்கு இன்று அதீத மழைக்கான வாய்ப்பென்பது..’ - வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கொடுத்த குட் நீயூஸ்!

ஜெனிட்டா ரோஸ்லின்

இன்று சென்னையில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்து, சென்னை மக்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் நிலையில், ‘அடுத்தடுத்த நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகனமழை பெய்யக்கூடும்’ என நேற்று கூறப்பட்டது. அதற்கேற்றபடி நேற்று முன்தினம் நள்ளிரவில் மழையானது இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்தது.

மழை

நேற்றும் பகல் முழுக்க பெய்த மழையானது, நேற்று இரவு தொடங்கி இன்னும் நிற்காமல் லேசான / மிதமான அளவில் பெய்தபடியே இருந்துவருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. பல வானிலை ஆய்வாளர்களும்கூட இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கலப்டடுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துவந்தனர்.

ஆனால் இதில் திடீர் ட்விஸ்ட்டொன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி, ‘இன்று சென்னையில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்து சென்னை மக்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

இதுபற்றி முதலில் தன் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்த பிரதீப் ஜான், “KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை)-க்கு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்துக்கு சீரான அளவில் மழை தொடரும்.

உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் ஒருங்கிணைப்பு, சற்றே வடக்கு நோக்கி இருக்கப்போகிறது. அதாவது தென் ஆந்திராவை நோக்கி இருக்கப்போகிறது. ஆகவே சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம்.

இன்னும் துல்லியமாக சொல்லப்போனால், காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுத்தும் கனமழை நமக்கு நடக்கப்போவதில்லை. சாதாரண மழை மட்டுமே நமக்கு கிடைக்கும். அனைத்தும் தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.

நமக்கு இன்று கிடைக்கும் மழை சாதாரண, சமாளிக்கக்கூடிய மழையாகவே இருக்கும் என்பதால், சென்னைவாசிகள் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த பிரதீப் ஜான், “நேற்று இரவு முதலே வானிலை மாற்றம் நிகழத்தொடங்கிவிட்டது. இருப்பினும் அச்சப்பட வேண்டிய அளவுக்கான மழை வாய்ப்பு நமக்கு இனி இல்லை. பிற்பகலுக்கு மேல் அதிகனமழைக்கு வாய்ப்பிருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அது அதிகனமழை என்று இருக்காது. லேசான மழையாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 2 - 3 செ.மீ மழை மட்டுமே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேற்றை போல தொடர் அதிகனமழை இருக்காது. இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்கு அனைத்து வட மாவட்டங்களிலும் இப்படியான மழை மட்டும் தொடரக்கூடும்” என்றார்.