மதுரையில் போட்டியிடும் மார்க்கிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு மு.க.அழகிரியை சந்திக்க மாட்டோம் என ரங்கராஜன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று புதுச்சேரியில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் ரங்கராஜன் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தோற்றுப்போகும் என்றும் நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முழுமையாக கடமையாற்றும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரங்கராஜன், ‘புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி என்பது மண்குதிரை. மக்கள் மண்குதிரையில் ஏறக் கூடாது. அது கரை சேராமல் கரைந்து போய்விடும்’ என்று தெரிவித்தார். மேலும், ‘மதுரையில் போட்டியிடும் மார்க்கிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு மு.க.அழகிரியை மார்க்சிஸ்ட் கட்சி சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் வேட்பாளர்கள் எல்லாரையும் சந்திப்பார்கள். அதில் எந்த தவறுமில்லை, மு.க.அழகிரி என்ன செய்வார் என தெரியாது. அவரை சந்திக்க வாய்ப்பு இல்லை’ என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.