தமிழ்நாடு

ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம்: தேனியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம்: தேனியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

kaleelrahman

ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம் என தேனியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் நிலவிய குழப்பங்களை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுகவை வழி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் முற்றத் துவங்கியது.

இதன் வெளிப்பாடாக திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், இபிஎஸ்-க்கு எதிராகவும் ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவை வழி நடத்துவோம் என்று தேனியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தேனி மாவட்ட மீனவரணி செயலாளரான வைகை கருப்புஜீ என்பவர் இன்று தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளார். அதில் 'அதிமுக எனும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே! மாண்புமிகு ஓ.பி.எஸ் அவர்களே! உங்கள் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம்!!,' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த பேனரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரது படம் மட்டுமே உள்ளது. தேனி நகரின் முக்கிய பகுதியான பங்களாமேடு எனும் இடத்தில் அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக நெல்லையை தொடர்ந்து தேனியிலும் பேனர்கள் வைத்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.