தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: "எங்கள் கூட்டணி கட்சி ஆதரவு, எங்களுக்குத்தான்"- ஜெயக்குமார் பேச்சு

ஈரோடு இடைத்தேர்தல்: "எங்கள் கூட்டணி கட்சி ஆதரவு, எங்களுக்குத்தான்"- ஜெயக்குமார் பேச்சு

webteam

“ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூடி விரைவில் முடிவுசெய்து வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை செலுத்துவதற்கான அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை வெற்றி எங்களுக்குத்தான். நாங்கள் என்றும் களத்தில் இருப்போம். அதிமுக ஆட்சி மன்றக் குழு கூடி கலந்து ஆலோசனை செய்து விரைவில் வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை அறிவிக்க வரும் 31ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம். கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களின் ஆதரவும் எங்களுக்கு உண்டு.

பொதுக்குழு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். அதிமுக வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் (A,B படிவத்தில்) எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இடுவார். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என யாருக்கும் திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைவது நிச்சயம்.

ஈரோடு கிழக்குத் தொகுதியை பொறுத்தவரை திமுக பணம் கொடுக்க தயாராகிவிட்டது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, `அதிமுக பெரிய கட்சி’ என்று அவரே கூறி இருக்கிறார். எங்கள் கூட்டணி கட்சி ஆதரவு, எங்களுக்குத்தான். ஓ.பன்னீர்செல்வம் யாரிடம் வேண்டுமானாலும் ஆதரவு கேட்கலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன” என்றார்.