தமிழ்நாடு

“விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” - கோவை ஆட்சியர் ராசாமணி உறுதி

“விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” - கோவை ஆட்சியர் ராசாமணி உறுதி

webteam

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மாதர் சங்க நிர்வாகிகளும், சிறுமியின் தாயாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் புகார் மனு அளித்தனர். அப்போது குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் காணவில்லை என்று நேற்று பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இன்று காலை சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நிரூபணம் ஆனது. இதனை அடுத்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சிறுமியின் கொலையைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மாதர் சங்க நிர்வாகிகளும், சிறுமியின் தாயாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் புகார் மனு அளித்தனர். சிறுமி கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிறுமி கொலை குறித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ''கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். சிறுமியின் கொலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று'' என்று தெரிவித்துள்ளார்.