தமிழ்நாடு

"பிராமணர்கள் செய்த சூழ்ச்சியை போன்றே நாமும் செய்யவேண்டும்"- இலக்கிய விழாவில் வைரமுத்து பேச்சு!

திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாம் காலியாகிவிட்டது என்றும், நாம் அனைவரும் தமிழில் பெயர்சூட்ட சபதம் கொள்ள வேண்டும் என்றும் மதுரை தமிழ்சங்க அரங்க மேடையில் கூறியுள்ளார் வைரமுத்து.

webteam

மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற வைகை இலக்கிய திருவிழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய வைரமுத்து, தயிரை கடைந்தால் வெண்ணெய் திரளும், தமிழை கடைந்தால் தமிழர்கள் திரளுவார்கள். மதுரையில் நான் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். மதுரை மண்ணை தின்று வளர்ந்தவன் நான். தமிழா தமிழை நம்பு. நம்பிய தமிழ் தமிழனை என்றும் கைவிடாது என தமிழர்கள் நெஞ்சில் எண்ணம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் பிறமொழிகளோடு நாம் கொண்டுள்ள உறவு என்பது வயிறு, மூளை, தொழில் உறவு போன்றது. ஆனால் தமிழோடு நாம் கொண்ட உறவென்பது தாய் உறவாகும். திருக்குறளுக்காகவும், வள்ளுவருக்காகவும் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

அவற்றை கொண்டாட வேண்டும். திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாமே காலி ஆகிவிட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற ஒற்றை குரலில் எல்லா உயிர்களுக்குமான சிந்தனையை வள்ளுவர் கொண்டிருந்தார். அவர் சொன்னதை போன்றே இந்த உலகம் மனிதர்களுக்கு ஆனது மட்டுமல்ல, பறவை, பூச்சி, விலங்குகளுக்கானதும் கூட என்று பேசினார்.

பிராமணர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள், வேதங்களை எழுதி வைத்தால் காணாமல் போகக்கூடும் என்று, ஒவ்வொரு பிராமணரையும் மனனம் செய்து கொள்ள வைத்தார்கள்.

அதன் வழியாக ஒவ்வொருவரும் வேதத்தின் பிரதியாகவே ஆனார்கள். இது ஒரு நல்ல சூழ்ச்சி. நாமும் இந்த சூழ்ச்சியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தமிழரும் திருக்குறளின், திருமூலரின் பிரதிகளாக மாற வேண்டும்.

தமிழில் பெயர் சூட்ட ஒவ்வொரு தமிழரும் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். பெயரில் வர்க்கம், ஜாதி எல்லாம் இருக்கிறது. பெயரில் தான் எல்லாமே இருக்கிறது. பெயர் என்பது அரசியல், நிர்வாகம், அரசாங்கம், அகிலம்" என பேசினார் வைரமுத்து.