தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்: வைகோ

kaleelrahman

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது அவசியமானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்நிலையில், இன்று மதிமுக தாயகம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,

"திமுக உடன் எடுத்த கூட்டணி நிலைப்பாட்டை மக்கள் அங்கீகரித்து இருக்கிறார்கள். திமுக அரசு தமிழர் நலன் மற்றும் சமூக நீதியை பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நீதிமன்றம் கூட பாராட்டி இருக்கிறது."என்றார்.

பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். கருப்புக் கொடி காட்டப்படுமா என செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த வைகோ, திமுக கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணிக் கட்சியுடன் திமுக இதில் முடிவு எடுக்கும் என்றார்.

அதேபோல் “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம். இதை தான் சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் வலியுறுத்தி இருக்கிறார். ஜனநாயகம் பேசும் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு கூட வரவதில்லை" என விமர்சித்தவர் தொடர்ந்து...

"தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி நீட் விலக்குகோரி வருகிறோம். இதில், நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்வதில் இருந்து மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதிமுக நிர்வாகிகள் பேசுவதிலும் பல முரண்கள் இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒன்று பேசினால், மற்றவர்கள் ஒன்று பேசுவதாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இன்னும் கைது செய்யாமல் இருப்பது காவல்துறைக்கு பெருமை அல்ல" என்றார்.