தமிழ்நாடு

“முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது” - சிபிசிஐடி தகவல்

“முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது” - சிபிசிஐடி தகவல்

rajakannan

சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாகவும், அதை வெளியிட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் திடீரென காணாமல் போனார். இதையடுத்து, முகிலனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் சீலிடபட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

முகிலன் மாயமாகி 112 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு தகவலையும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சிபிசிஐடி விசாரணை அதிகாரியை அழைத்த நீதிபதிகள் விசாரணை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர். பிறகு, விசாரணை சரியான பாதையில் உள்ளது என்றும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ள நிலையில், அதுகுறித்து வெளியிட்டால் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை அதிகாரிகளுக்கு கூடுதல் காலம் அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.