தமிழ்நாடு

’’தமிழகத்தில் நடப்பது வெறுப்பு அரசியல்; ரஜினி அதனை மாற்றுவார்’’ - தமிழருவி மணியன்

’’தமிழகத்தில் நடப்பது வெறுப்பு அரசியல்; ரஜினி அதனை மாற்றுவார்’’ - தமிழருவி மணியன்

webteam

ரஜினி ஆரம்பிக்க இருக்கும் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் தமிழருவி மணியன், ரஜினியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறும் போது,  “கட்சியில் உயர்மட்ட குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும், கட்சியின் அடிப்படைக் கட்டுமானங்கள் பற்றியும் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம்.” என்றார்.

முதல்வர் வேட்பாளராக ரஜினி நிற்கவில்லை என்று கூறியிருந்தாரே அந்த நிலைப்பாட்டில் ரஜினி இன்னும் உறுதியாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியபோது  “அது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. அவர் தனிக்கட்சி தொடங்கிய உடனே அவரின் பின்னே இயல்பாகவே வாக்காளர்கள் வரும் சூழ்நிலை கனிந்து விடும். ஒரு பேரழுச்சியை நிச்சயம் நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. கட்சிப் பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தையும் ரஜினி கூறுவார். ரஜினி வரவால் மற்றக்கட்சிகள் பாதிப்பில்லை என்று கூறுவதே அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. திமுகவின் தவறுகளையும் அதிமுகவின் தவறுகளையும் பேசிப் பேசியே மக்களிடம் சென்று சேர வேண்டும் நாங்கள் நினைக்கவில்லை.

ரஜினி முன்னெடுப்பது ஆன்மீக அரசியல். அவர் முழுக்க முழுக்க உடன்பாட்டு முறையில் அரசியலை முன்னெடுக்கிறாரே தவிர எதிர்மறையாக செயலாற்றுவதற்காகவோ, அல்லது எதிர்வினையாற்றுவதற்காகவோ அவர் இங்கு வரவில்லை. இதுவரை தமிழகத்தில் நடப்பது வெறுப்பு அரசியல். ரஜினி அதற்கு மாறுபட்டவராய்,  ஆரத்தழுவி அரவணைத்து செல்லக்கூடிய அரசியலை முன்னெடுக்க இருக்கிறார்.

ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் தொடர்பில்லை. ரஜினி குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயலாற்றுவார் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு கடன் பட்டிருக்கிறார். மகாத்மாதான் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தார்” என்றார். முன்னதாக ரஜினியையும் தன்னையும் பிரிக்க சதி நடக்கிறது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.