தமிழ்நாடு

மத்திய அரசின் எந்த திட்டமும் எங்களுக்கு கிடைக்கவில்லை – தருமபுரி மலை கிராம மக்கள் வேதனை

மத்திய அரசின் எந்த திட்டமும் எங்களுக்கு கிடைக்கவில்லை – தருமபுரி மலை கிராம மக்கள் வேதனை

kaleelrahman

தருமபுரி மாவட்ட காவிரி கரையில் உள்ள கிராமங்களில் பிரதம மந்திரி இலவச வீடு மற்றும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் கிராம மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.

தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையாக காவிரி ஆற்றின் கரையோரமாக உள்ளது ஏமனூர் கிராமம். மலைகளும் காவிரி ஆறும் சூழ்ந்து, மேட்டூர் அணையின் நீர் தேக்கத்தின் பகுதியில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதி மக்களின் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக விவசாயம் மற்றும் காவிரி ஆற்றில் மீன் பிடித்தல், ஆடு மாடு மேய்த்தல் உள்ளிட்டவை இவர்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இப்பகுதி முழுவதும் மூன்று பக்கங்கள் மலைகளாலும் ஒரு பக்கம் காவிரி ஆற்றாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் மண் சாலையாகவே இருந்தது. அதனையடுத்து தார்சாலை அமைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏமனூருக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது.

நாகமரை ஊராட்சியில் அடங்கியுள்ள ஏமனூர், மேற்கு ஏமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இதுநாள் வரை மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் இலவச வீடு திட்டம் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் எதுவும்; வந்து சேரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குளியலறை போன்றவற்றை தற்போது வரை தென்னை ஓலைகள் மற்றும் துணிகளை வைத்து மறைத்து கட்டி அங்கு இருப்பவர்கள் குளியலறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் புகார் மனுக்கள் கொடுத்தும் இதுநாள் வரை தங்கள் பகுதி கிராம மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்று வேதனையுடனும் ஏக்கத்துடனும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையம் எப்பொழுதும் பூட்டியே இருப்பதாகவும் அவசர தேவைகள் மற்றும் பிரசவம் உள்ளிட்ட சமயங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள நியாய விலை கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மிகவும் தரமற்றதாக வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அடர்ந்த மலைப் பகுதியை தாண்டி கிராமப் பகுதியில் இருப்பதால் தங்களுக்கான உரிமைகள் சலுகைகள் அத்தியாவசிய திட்டங்கள் முதல் அனைத்துமே கிடைப்பதில்லை என்று வேதனையாக தெரிவிக்கின்றனர்.

இனியாவது எங்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை முழுமையாக எங்கள் கிராம பகுதி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.