தமிழ்நாடு

“ரேபிடோ செயலி மீதான தடையை நீக்க முடியாது” - உயர் நீதிமன்றம்

“ரேபிடோ செயலி மீதான தடையை நீக்க முடியாது” - உயர் நீதிமன்றம்

rajakannan

தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் ரேபிடோ செயலி மீதான தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி சொந்த வாகனத்தை வாடகை சேவைக்காக பயன்படுத்தக் கூடாது என்பதாலும் இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த இன்னும் விதிமுறை இயற்றப்படாததாலும், ரேபிடோ பைக் ஆப்-ஐ கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறும் அதன் இணையதளத்தை முடக்குமாறும் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மாநகர ஆணையர் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழக அரசு விதிகளை உருவாக்கும் வரை, ரேபிடோவை அனுமதிக்க முடியாது எனக் கூறி தமிழக அரசின் தடையை நீக்க மறுத்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, அவசர வழக்காக இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது ரேபிடோ நிறுவனம் சார்பில், “தனி நீதிபதியின் உத்தரவில் மற்ற மாநிலங்களில் செயல்படுவது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி மற்ற மாநிலங்களிலும் செயல்பட முடியாத வகையில் இணையதளத்தையும், செயலியையும் முடக்கியுள்ளதால், தனி நீதிபதி உத்தரவில் திருத்தம் செய்து தமிழ்நாட்டிற்கு மட்டும் தடை பொறுந்தும் என மாற்றியமைக்க வேண்டும்” என வாதிட்டப்பட்டது.

இதையடுத்து, அரசு தரப்பின் விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு மாநகர காவல் ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 1 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.