தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய ‘சர்கார்’ காட்சிகளை நீக்க ஒப்புதல் - திரையரங்க உரிமையாளர் சங்கம்

சர்ச்சைக்குரிய ‘சர்கார்’ காட்சிகளை நீக்க ஒப்புதல் - திரையரங்க உரிமையாளர் சங்கம்

rajakannan

அதிமுகவினர் போராட்டம் எதிரொலியாக ‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே இந்தத் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவருக்கு திரைப்படத்தில் கோமளவள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது. அதிமுக அமைச்சர்கள் பலரும் ‘சர்கார்’ படம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து, இப்படத்தை வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர். 

‘சர்கார்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் கிண்டி-கோயம்பேடு சாலையில் ஜாபர்கான்பேட்டையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இங்கும் நடிகர் விஜய் பேனர்களை கிழித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கு முன்பும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், ‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் பேசுகையில், “அதிமுகவினரின் போராட்டங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை மக்களின் மனம் புண்படும்படி காட்சிகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி சுமூகமாக தீர்த்து வைக்கப்படும். 

அந்த வகையில் உரிய தயாரிப்பாளர்களிடம் ஒப்புதல் பெற்று இந்தத் தகவலை கூறுகின்றேன். நாளை காலை 10 மணிக்கு மத்திய தணிக்கைக் குழு உறுப்பினர்களின் அனுமதியுடன் ஆட்சேபனையான காட்சிகள் நீக்கப்படும். அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் இந்தத் தகவலை தெரிவிக்கின்றேன். அமைச்சர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவரிடமும் இதுதொடர்பாக உறுதிமொழி அளித்துள்ளேன். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.