KP.Ramalingam pt desk
தமிழ்நாடு

”தமிழகத்தை 3 ஆக பிரித்தால் ரூ.45,000 கோடியை பெற்றுத்தர நாங்கள் தயார்” - பாஜகவின் கேபி.ராமலிங்கம்!

webteam

செய்தியாளர்: எம்.துரைசாமி

தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ”மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் சுமார் 48 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயை, இதுவரை உலக ஜனநாயக வல்லரசு நாடுகளை விஞ்சும் வகையில் அதிக அளவில், நிதி வருவாய், திட்ட செலவுகள் உள் கட்டமைப்புகளுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா காலத்தில் பொருளாதார பாதிப்பை சந்தித்து நிலையில், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த நிலையிலும் கூட 7.5 சதவீதம் வரை மத்திய பாஜக அரசால் நாட்டின் வளர்ச்சியை காட்ட முடியும் என இந்த நிதிநிலை அறிக்கையால் நிரூபித்துள்ளோம்.

நிர்மலா சீதாராமன்

ஏற்கனவே நடைபெற்ற திட்டங்கள், புதிதாக போடப்படும் திட்டங்கள், இவைகள் அனைத்திலும் துறை வாரியாக குறைந்தபட்சம் 10 சதவீத வளர்ச்சியை எட்டி இருக்கிறது. கடந்த பாஜக அரசு அளித்த நிதிநிலை அறிக்கையை விட தற்போதைய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சியை காட்டியுள்ளோம். வரும் 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம்.

பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு, இருந்த ஆட்சியாளர்களால் நிதிநிலை அறிக்கை நாட்டின் வளர்ச்சியை எட்டவில்லை. மேட் இன் இந்தியா, மேக் இன் இந்தியா, சிறு - குறு நடுத்தர தொழில், தொழிற்சாலைகள் மேம்பாடு, புதிய தொழில் முனைவோர், புது தொழில்களை உருவாக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பாதுகாப்பான வகையில் மத்திய பாஜக அரசால் வழிநடத்தப்பட்டது.

3-வது முறையாக பொறுப்பேற்ற பிரதமர், நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதி அடிப்படையில் 2047ல் நாட்டை வல்லரசாக்குவோம். வளர்ச்சி அடைந்த பாரதம் வலிமையான பாரதம் கட்டமைப்புகளை, அடித்தளத்தை ஏற்படுத்துவோம் என்ற உன்னத நோக்கத்தோடு முன்னேற்றம் காண்கின்ற வகையில் இந்த நிதிநிலை அறிக்கையை பிரதமர் வழங்கி உள்ளார். இதனை மாவட்டம் தோறும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வருகின்றனர். அனைத்து ஊடகங்களிலும் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் வேறு விதமாக, பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழகத்திற்கு எதுவும் வழங்கவில்லை என தவறான தகவலை ஆளும் திமுகவினர் பரப்பி வருகின்றனர்.

cm stalin

ஆளும் திமுகவின் இயலாமையால் வரும் காலங்களில் திமுக அரசு சந்திக்கும் தோல்விகளுக்காக அரசை நடத்த முடியாமல் தவறான நிர்வாகத்தால் அரசுத்துறை தமிழகம் சீர்கேடு அடைந்துள்ளது. கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களிலிருந்து தமிழக மக்களை திசை திருப்புவதற்காகவே மத்திய நிதிநிலை அறிக்கையின் மீது குறைகூறி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதால் தான் அரசுத்துறை உயர் அலுவலர்கள் அதிகாரிகளை திமுக அரசு அடிக்கடி பணியிட மாற்றம் செய்து வருகிறது. இதுவே நிர்வாக திறனற்ற அரசு என்பதற்கு உதாரணமாகும். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் கூறுவது அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகளே ஆகும்.

மத்திய நிதிநிலை அறிக்கையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது, தமிழகத்திற்கு எந்தெந்த துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை, கடந்தாண்டு வழங்கியதில் இந்த பாஜக அரசு எதில் குறைவாக வழங்கியுள்ளது? என விளக்கம் அளிக்க வேண்டும். ரயில்வே துறையில் தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்கி விட்டதாக ரயில்வே துறையின் பொது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். ஒரு திட்டத்தை செயல்படுத்த, அறிவிப்பு, சர்வே, அப்ரூவல், நிலம் கையகப்படுத்துதல், இதுபோன்ற பல்வேறு பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.

ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல் வழியாக அரியலூர் பெரம்பலூருக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த நான்கு, ஐந்து இடங்களில் ஆறு குறுக்கீடு உள்ளது. அதனால்தான் இந்த அறிக்கையில் நிதியை வெளியிட முடியவில்லை.

chennai metro

மத்திய அரசின் திட்டம் செயல்படுத்துவதற்கு மாநில அரசு, ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஒத்துழைப்பு இல்லாத மாநில அரசு மெத்தனமாக இருந்த காரணத்தினால் சில திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே துறையில் எந்த திட்டங்களும் நிலுவையில் இல்லை என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார். பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே அளித்துள்ள உறுதியின் பெயரில்தான் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஆந்திராவிற்கு சிறப்பு நிதியை அறிவித்தார்கள். அதற்குப் பின்னால் வழங்கவில்லை. எனவே தான் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தையும் 3 ஆக பிரித்தால் தலா 15 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் 45 ஆயிரம் கோடி ரூபாயை இங்கு நிதிநிலை அறிக்கையில் பெற்றுத்தர நாங்கள் தயாராக உள்ளோம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஆளும் திமுக அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வந்தார். ஆளும் திமுக அரசில், பல்வேறு குற்றச்சாட்டுகளும் நிர்வாக சீர்கேடுகளும் மலிந்துவிட்ட நிலையில், மத்திய பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஆனால், பிரதமர் மோடி தமிழக நலனுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியுள்ளார். தொடர்ந்து தமிழகத்தின் நலத்திட்டங்களுக்கு அவர் உயர் முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

PM Modi

எனவே, மத்திய பாஜக அரசாங்கத்திற்கு, தமிழகத்தை ஆளும் திமுக அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கினால்தான் இம்மாநில மக்களுக்கான சேவைகளை திமுக அரசால் செய்ய முடியும். பாஜகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது இன்னும் கூடுதலாக மக்கள் சேவையை முழுவீச்சில் மேற்கொள்ள முடியும்”

என்று கேபி.ராமலிங்கம் தெரிவித்தார்.