சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வேலை நிறுத்தத்தால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை. தலைநகர் சென்னையில் பெரும்பாலும் குடிநீருக்காக தண்ணீர் லாரிகளையே மக்கள் நம்பி இருக்கும் நிலையில், இவ்வேலை நிறுத்தப் போராட்டம் மக்களிடத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் தற்சமயம் சென்னை முழுமைக்கு நீர் வழக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை. ஆகவேதான் மக்கள் லாரி தண்ணீரை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். ஏற்கெனவே தினம் தினம் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வால் தண்ணீர் லாரிகளின் விலை ஏற்றம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் அரசின் நெருக்கடி வேறு சேர்ந்துள்ளதால் மக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கள் முழுவதும் இந்த லாரி தண்ணீரையே ஜீவாதாரமாக கொண்டு இயங்கி வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் அவர்களை மிக மோசமாக பாதித்துள்ளது என சென்னைவாசிகள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் குடிநீருக்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலும் தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள்தான். அத்தனை லாரிகளும் இயங்காமல் பள்ளிக்கரணை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.