தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், நீர் பற்றாக்குறை காரணமாக கட்டுமான நிறுவனங்கள் தங்களது கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.
தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிக்க, குளிக்க, அன்றாட தேவைகளுக்காக தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகின்றனர். தண்ணீர்தான் இந்த பூமியின் மிகப்பெரிய சொத்து என்பதை மக்களும் புரிந்துள்ளனர். அதற்கேற்ப சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி வந்தாலும் கூட சில இடங்களில் தண்ணீர் வீணாவதையும் பார்க்க முடிகிறது. நீர் பற்றாக்குறையால் ஏற்கெனவே ஹோட்டல்கள் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.
இந்நிலையில் கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன. கட்டுமானத்தை பொறுத்தவரையில் அஸ்திவாரம், தூணை மேலே எழுப்புவது, சாந்து குலைப்பது என அனைத்திற்கும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். ஆனால் தண்ணீர் பல இடங்களில் மிகக் குறைவாக இருப்பதால், அத்தகைய தண்ணீர் பொதுமக்களின் அன்றாட தேவைக்கே பயன்படட்டும் என கட்டுமான நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால் கட்டுமான பணிகளை தற்போது நிறுத்திவைத்து விட்டு மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை தீர்ந்த பின்னர் கட்டுமான பணிகளை தொடங்கலாம் எனவும் கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கட்டுமான நிறுவனங்களின் இந்த திடீர் முடிவால் அதில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழில்களில் ஏராளமான வடமாநில இளைஞர்களும் பணியாற்றுகின்றனர். தற்போது வேலை இல்லை என்றவுடன் அவர்கள் தங்களது மாநிலத்திற்கே மீண்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல லட்சம் ரூபாய்களை வங்கியில் லோனாக பெற்றுவிட்டு வீடு கட்ட திட்டமிட்டிருந்தவர்கள் எல்லாம், தற்போது கட்டுமான நிறுவனங்களின் திடீர் முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.