வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நீர் இருப்பு போதுமானதாக இல்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் தற்போது நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இருப்பினும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடியில் தற்போது ஆயிரத்து 752 மில்லியன் கன அடி அளவிற்கே நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நான்கு ஏரிகளிலும் மொத்தமாக 4 ஆயிரத்து 524 மில்லியன் கன அடி நீர் இருந்தது.
இன்றைய நிலவரப்படி புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடியில் தற்போது ஆயிரத்து 133 மில்லியன் கன அடி அளவிற்கு நீர்வரத்து உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 948 கன அடியாகவும் வெளியேற்றம் 80 கன அடியாகவும் உள்ளது.
அடுத்ததாக, ஆயிரத்து 81 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 40 மில்லியன் கன அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து ஆயிரத்து 16 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 206 மில்லியன் கன அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 179 கன அடியாக உள்ள நிலையில், வெளியேற்றம் 41 கன அடியாக மட்டுமே இருக்கிறது.
அதேபோல், பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் தற்போது 373 மில்லியன் கன அடி அளவிற்கே நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு தற்போது 139 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 27 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம்
மொத்தக் கொள்ளளவு 3,645 மி.கன அடி
நீர் இருப்பு: 206 மி.கன அடி
நீர் வரத்து: 179 கனஅடி
வெளியேற்றம்: 41 கன அடி
புழல்
மொத்தக் கொள்ளளவு 3,300 மி.கன அடி
நீர் இருப்பு: 1,133 மி.கன அடி
நீர் வரத்து: 948 கனஅடி
வெளியேற்றம்: 80 கனஅடி
பூண்டி
மொத்தக் கொள்ளளவு 3,231 மி.கன அடி
நீர் இருப்பு: 373 மி.கன அடி
நீர் வரத்து: 139 கனஅடி
வெளியேற்றம்: 27 கன அடி
சோழவரம்
மொத்தக் கொள்ளளவு 1,081 மி.கன அடி
நீர் இருப்பு: 40 மி.கன அடி
நீர் வரத்து: 16 கனஅடி
வெளியேற்றம்: இல்லை
\
இதனிடையே, ஏரிகள் மாவட்டமான காஞ்சிபுரத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, நேற்று பெய்த கனமழை காரணமாக ஒரேநாளில் 13 அடியை எட்டியது. மதுராந்தகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக 24 புள்ளி 3 அடி கொண்ட மதுராந்தகம் ஏரி, ஒரேநாளில் 13 அடியை எட்டியுள்ளது. 694 மில்லியன் கன அடி கொள்ளளவில், தற்போது 140 மில்லியன் அளவுக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த ஏரிக்கு கிளி ஆறு மற்றும் நெல்வாய் மதகு மூலம் 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு மேலும் நீர்வரதது அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏரியை நம்பியுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.