தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.பி.அணை வேகமாக நிரம்பி வருகிறது.
கடந்த ஆறுமாதங்களாக போதிய மழை இல்லாததால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மற்றும் ஒசூர் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கெலவரப்பள்ளி அணையில் மொத்த கொள்ளவான 44 அடியில் தற்போது 42 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீர் உபரிநீராக ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கே.ஆர்.பி.அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்து உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 560 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 42 கனஅடியாக உள்ளது. 40 அடியாக நீர்மட்டம் உயர்ந்தால் கால்வாய் மூலமாக ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.