சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மாதம் முதல் பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
மழை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 924 நீர் நிலைகளில் 555 நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியிருக்கின்றன. அவற்றின் மொத்த கொள்ளளவான 20 டிஎம்சியில் தற்போது 16.2 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. நவம்பர் மாதம் பெய்த மழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்திருப்பதாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
அடையார், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் அதிக அளவில் உயர்ந்துள்ளது. அடையாரில் கடந்த அக்டோபரில் 4.21 மீட்டர் ஆக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 4.76 மீட்டராக அதிகரித்துள்ளது. ஆலந்தூரில் 4.68 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 5.12 மீட்டராக உயர்ந்துள்ளது. அண்ணா நகரில் 4.07 மீட்டராகவும், ராயபுரத்தில் 6.66 மீட்டராகவும், தண்டையார்பேட்டையில் 6.28 மீட்டராகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பெருங்குடி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.