விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை இரண்டாவது முறையாக உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன்பாக விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டபபட்டது. இந்த தடுப்பணை கட்டிய ஒரு மாதத்திற்குள்ளாகவே பெய்த கனமழை காரணமாக தடுப்பணையின் ஒரு பகுதியான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள கதவணையில் ஒன்று உடைப்பு ஏற்பட்டது.
இதனால் நீரை தேக்கி வைக்க முடியாமல் நீர் முழுவதுமாக அப்போது வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மண் சுவர்கள் எழுப்பப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியைச் சேர்ந்த தடுப்பணையின் ஒரு பகுதி முற்றிலுமாக உடைந்து சேதமானது. இதனால் தண்ணீர் முழுவதுமாக தற்போது வெளியேறி வருகிறது.
உடைப்பு ஏற்பட்ட பகுதியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு தண்ணீர் வெளியேறாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான நீர்ப்பாசன வசதி இந்த ஆண்டும் இல்லாமல் போகும் நிலையே இருந்து வருகிறது. உடனடியாக தண்ணீர் வெளியேறமல் தடுப்பதற்கான மாற்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.