குடிநீர் கேன்களுக்கு ஜிஎஸ்டி வரியில் விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்யக் கோரி, தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
சுதந்திரத்துக்கு பிந்தைய நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது. இந்த புதிய வரிவிதிப்பின்படி பல்வேறு பொருட்களுக்கான வரி விதிப்பு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் குடிநீர் கேன்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாக பேசிய குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முரளி, குடிநீர் கேன்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. குடிநீர் ஆலைகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் எடுப்பதை அதிகாரிகள் தடுத்து வருவதாகவும், ஆலைகளை மூட அவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தார். புதிய வரிவிதிப்பினை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்துவரும் பெரும்பாலான மக்கள், தங்கள் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய குடிநீர் கேன்களையே சார்ந்திருக்கும் நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.