தமிழ்நாடு

தொடரும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

webteam
கேன் குடிநீர் ஆலை உரிமையாளர்களின் போராட்டம் 3ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
குடிநீர் ஆலை தொடர்பான வழக்கு ஒன்றில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை மூடும் உத்தரவை ஆட்சியர்கள் நிறைவேற்ற வேண்டும், தவறினால் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீர் எடுக்க உரிமம் பெற வழிகளை எளிதாக்க வேண்டும், கொள்கை முடிவுகளை தமிழக அரசு உருவாக்கித் தர வேண்டும் என கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 3ஆவது நாளை எட்டியுள்ளது. 
2014ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து செயல்பட்டு வரும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியும், அதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்கவில்லை எனவும் உற்பத்தியாளர்கள் புகார் கூறுகின்றனர். தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆயிரத்து 612 குடிநீர் ஆலைகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீர் ஆலைகள் அடங்கும். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 
குடிநீர் ஆலைகளில் இருந்து தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கேன் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பண்டிகை காலம் மற்றும் கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் வரை குடிநீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், போலியான குடிநீர் ஆலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறும் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள், இந்த போராட்டம் நீடித்தால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விலையும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.