அதிமுக - நாதக pt
தமிழ்நாடு

தொடரும் இணக்கமான போக்கு; நாம் தமிழர் உடன் கூட்டணியா? அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

கடந்த சில மாதங்களாகவே அதிமுக - நாம் தமிழர் இடையே ஒரு இணக்கமான போக்கு நிலவிவரும் சூழலில் இப்படியொரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர் அதிமுகவினர்.. தற்போது, மட்டுமல்ல கடந்த 2021 தேர்தலின்போதே இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், கூட்டணி உருவாகவில்லை...அப்போது என்ன நடந்தது, தற்போது என்ன நடக்கிறது விரிவாகப் பார்ப்போம்..

மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது தொடர்பாக, சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கடந்த பத்தாம் தேதியிலிருந்து தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.. அந்தவகையில், இன்று அரக்கோணம் தொகுதியில் அதிமுகவின் தோல்வி குறித்து நிர்வாகிகளிடம் விவாதிக்கப்பட்டது.. அப்போது, கட்சித் தலைமை ‘யாருடன் கூட்டணி வைக்கலாம்?’ என கேட்ட நிலையில், ‘நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும்’ என கட்சி நிர்வாகிகள் பலரும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

நேரடியாக கோரிக்கை வைத்த சீமான்..

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை நோக்கி, கடந்த காலங்களில் நான் அதிமுகவுக்காக எந்த பிரதிபலனும் பார்க்காமல் தேர்தல் வேலை செய்திருக்கிறேன்... அதனால், எங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என நேரடியாக கோரிக்கை விடுத்தார் சீமான்... அதோடு நிற்காமல், அதிமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இடைநீக்கம் செய்ததைக் கண்டித்திருப்பதோடு, அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் முழு ஆதரவை தெரிவித்தார்... இராவணன், இடும்பவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை, அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்த ராஜரத்தினம் மைதானத்துக்கு நேரில் சென்று ஆதரவையும் தெரிவிக்க வைத்தார்...

சாட்டை துரைமுருகன்

சமீபத்தில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்தனர்... ஆரம்பத்தில் இருந்தே திமுகவை விமர்சிக்குமளவுக்கு, அதிமுகவை சீமான் விமர்சிப்பதில்லை என்கிற பார்வையை அரசியல் பார்வையாளர்கள் முன்வைப்பதுண்டு... இந்தநிலையில், தற்போது தோழமை என்பதைத்தாண்டி, கூட்டணி என்கிற அளவில் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.. அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி அடிமட்டத் தொண்டர்களும்கூட கூட்டணியை வலுப்படுத்தவேண்டும், நாம் தமிழரை உள்ளே கொண்டு வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்போடுதான் இருக்கிறார்கள்...

முன்பிருந்த நிலை என்ன?

இப்போது மட்டுமல்ல. கடந்த 2021 தேர்தலுக்கு முன்பாகவே, தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு விட்டு, நாம் தமிழர் கட்சியை உள்ளே கொண்டு வரலாம் என பல நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர்... அவர்களுக்கு 10 சீட்டு கொடுக்கலாம்,. தொகுதிக்கு அவர்களுக்கு பத்தாயிரம் முதல் வாக்குகள் கிடைக்கிறது...அது நமக்கு நிச்சயம் கைகொடுக்கும் என ஆலோசிக்கப்பட்டு, அதிமுக தரப்பில் அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன...

சீமான், எடப்பாடி பழனிசாமி

ஆனால், அப்போது சீமான் பிடிகொடுக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகின.. இதற்கிடையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சீமானிடம் மனமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்... வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதைத்தாண்டி, வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழையவேண்டியது மிகவும் அவசியம் என உணர ஆரம்பித்திருக்கிறார்...

சீமான்

நம் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் 2013-ல் கட்சி தொடங்கிய பவல் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வர் ஆகிவிட்டார்...வெற்றிக் கணக்குகளைத் தொடங்க இனியும் தாமதிக்ககூடாது என சீமானும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்...இல்லாவிட்டால், நேரடியாக ஆதரவெல்லாம் கேட்கமாட்டார்...அதனால் வரும் தேர்தலில், அவர் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்...