தமிழ்நாடு

கடல் அலைகள் உயரமாக எழுந்து சீற்றத்துடன் இருக்கும்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கடல் அலைகள் உயரமாக எழுந்து சீற்றத்துடன் இருக்கும்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Rasus

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடல் சீற்றம் இருக்கும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், “ ஏப்ரல் 21ம் தேதி காலை 8.30 மணியிலிருந்து, 22ம் தேதி இரவு 11.30 மணி வரை 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் இரண்டரை அல்லது மூன்று மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து காணப்படும். கடலில் ஏற்படும்  இயற்கை மாற்றத்தால் இந்த நிகழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பது குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்னக கடற்பகுதியில் சீற்றம் அதிகமாக இருக்கும்.

மீனவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது சுனாமி சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல. பொழுதுபோக்காவோ, விளையாட்டிற்காகவோ, மீன்பிடிக்கவோ மறுஅறிவிப்பு வெளியாகும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.