தமிழ்நாடு

வடபழனி மெட்ரோ நிலையத்தை அழகுப்படுத்தப் போகும் திரைநட்சத்திரங்கள்!

webteam

சிவாஜி கணேசன் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என பல கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் சுவரோவியங்களாக விரைவில் வடபழனி மெட்ரோ நிலையத்தை அலங்கரிக்க உள்ளனர். 

இதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) மெட்ரோ ஸ்டேஷன் சுவர்களில் சுவரோவியங்களாக தீட்டவும் கூடவே நமது மாநிலத்தின் வரலாற்றை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கவும் படங்களை வரையவும் சில தனியார்  நிறுவனங்களுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்கின்றனர். 

இது குறித்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் ஜப்பானிய நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றனர். வடபழனி மெட்ரோ நிலையத்தில், பிரபலமான தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்களின் ஓவியங்கள் வெளிப்புற சுவரில் வரையப்பட உள்ளதாக தெரிகிறது. ரயில் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் போதே இவை பார்வையிட வழிவகுக்கும் அவர்கள் எனத் தெரிவித்தனர்.

‘இதே போன்று மற்ற ரயில் நிலையங்களிலும் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடனக் கலைஞர்களை வரைய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அவைகளில் சில கேலிச்சித்திர வடிவத்தில் இருக்கும்’என்கிறார் ஒரு மெட்ரோ ரயில் அதிகாரி.

மேலும், வடபழனி நிலையத்தில் இந்தச் சுவரோவியங்கள் பற்றி பயணிகளிடம் இருந்து கிடைக்கும் கருத்துக்களை பெற்று பிற உயர்ந்த மற்றும் பாதாள தடங்களிலும் சுவரோவியங்கள் வரையப்பட உள்ளன. ‘ரயில் நிலையங்களில் சுவரோவியங்கள் வரைவதற்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு கோரிக்கைகள் வந்தன. அவ்வாறு வரைந்தால் பயணிகளின் ஆர்வத்தை அது அதிகப்படுத்தும் என அவர்கள் கூறியிருந்தனர். ஆகவே அதனை மேற்கொள்ள உள்ளோம்’என அதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்லி, மும்பை மற்றும் பூனே போன்ற மாநிலத்தில் உள்ள மெட்ரோ நிலையங்களில் இது போன்ற சுவரோவியங்கள் ஏற்கெனவே வரையப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே, 98 ஆண்டுகள் பழமையான ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வரலாற்றை சித்தரிக்கும் பெரிய சுவரோவியம் ஒன்று மெட்ரோ ரயில் நிலைய பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.