ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது.
இரண்டாண்டுகள் கொரோனா முடக்கம், கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் என மூன்றாண்டுகள் கடைப்பிடித்த பல்வேறு விதிமுறைகள் இன்றி முழு தளர்வுகளுடனான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் இது என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
இருமுடியோடு பதினெட்டாம்படி ஏறும் பக்தர்களை ஒவ்வொருவராக கடத்தி விடுவதில் போலீசார் திணறி வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் மொய்ப்பதால் நடைப்பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலையில் சனிக்கிழமை வரையிலான நான்கே நாட்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது.
அதோடு சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் வனப்பாதைகளான நீதிமலை, அப்பாச்சி மேடு, சரங்கொத்தி, புல்லு மேடு, சத்திரம் ஆகியன திறக்கப்பட்டுள்ளதும், பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வரும் நாட்களில் தினசரி பக்தர்களின் வருகை ஒரு லட்சம் கடக்கும் என எதிர்பார்ப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.