தமிழ்நாடு

“ஃபேஸ்புக் மூலம் காதலித்த புழல்சிறை காவலர் ஏமாற்றிவிட்டார்” தீக்குளித்த சிறுமி வாக்குமூலம்

“ஃபேஸ்புக் மூலம் காதலித்த புழல்சிறை காவலர் ஏமாற்றிவிட்டார்” தீக்குளித்த சிறுமி வாக்குமூலம்

Sinekadhara

சென்னை வியாசர்பாடியில் முகநூல் மூலம் காதலித்த புழல்சிறை காவலர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி 17 வயது சிறுமி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19-வது தெருவை சேர்ந்தவர்கள் ஜான் கென்னடி மற்றும் எலிசபெத் தம்பதியினர். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும், கிரேசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது மகளும் உள்ளனர். மின்ட் பகுதியில் உள்ள கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டில் கிரேசி படித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களாக அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்ற நபரோடு முகநூல் மூலமாக பழக்கமாகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் புழல் சிறையில் காவல் கண்காணிப்பாளருக்கு துப்பாக்கி பாதுகாப்பு பணியில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது கிரேசியின் பெற்றோர்களுக்கு தெரிந்து தட்டிக் கேட்டதாகவும், மேலும் கிரேஸியின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. மேலும், 6 மாதமாக காதலித்துவிட்டு தற்பொழுது திருமணம் செய்ய மகேஷ் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிரேசி, நேற்று மாலை அவரது அம்மாவுடன் இதுகுறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் கிரேசி தனது அறையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவரும் கிரேசி வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், அந்த வாக்குமூலத்தில் தமது இந்த நிலைக்கு காவலர் மகேஷ்தான் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.