ராசிபுரம் முகநூல்
தமிழ்நாடு

சாலை வசதி இல்லை! மலைக்கிராமங்களில் தலைச்சுமையாக கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் தங்களின் தலையில் சுமந்து செல்வது தொடர் கதையாகி வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் தங்களின் தலையில் சுமந்து செல்வது தொடர் கதையாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது போதமலை. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நாளை (19.4.2024) நடக்கவிருக்கு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கீழூர், கெடமலை ஆகிய இரு கிராமங்களில் இருக்கும் ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. இந்த மலைப்பகுதியை அடைய சுமார் 7 கிமீ பயணிக்க வேண்டி உள்ளது.

அதுவும், ஆரம்ப காலத்தில் இருந்தே சாலை வசதி இல்லாத கிரமமாக உள்ளதால் அப்பகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மைகள் போன்ற தேர்தலுக்கு தேவையானவற்றை எடுத்து செல்லுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் வடுகம் அடிவாரத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் தங்களின் தலையில் சுமந்து கொண்டு அப்பகுதி வாக்குச்சாவடியை அடைந்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் இப்படி தலையில்தான் சுமந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்தவருடமே இங்கு சாலைகள் அமைப்பதற்கு ரூ.140 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. முன்னதாக, இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகளானது கழுதைகளின் மூலமாக கொண்டு செல்லப்பட்டன என்பது கூடுதலான தகவல்.

மொத்தமாக 1142 வாக்காளர்களை கொண்ட இந்த கிராமங்களில் கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும், 417 பெண் வாக்காளர்களும், கெடமலையில் 159 ஆண் வாக்காளர்களும், 138 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர் என்பது கூடுதலான தகவல்.