கட்சி தலைவர்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுக, பாஜக... வாக்கு சதவீதம் எவ்வளவு?

PT WEB

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் முழுமையாக திமுக கூட்டணி வென்றுள்ள நிலையில், அதன் வாக்கு சதவிகிதம் எப்படி உள்ளது, மற்ற கட்சிகளின் வாக்கு சதவிகிதம் எப்படியுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்...

தமிழகத்தில் இந்த முறை மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. புது வியூகங்கள், கூட்டணி அமைத்து கட்சிகள் களமிறங்கின. திமுக தனது முந்தையக் கூட்டணியையே தொடர்ந்தது. கடந்த முறை 24 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இம்முறை 22 இடங்களில் மட்டுமே களம் கண்டது. திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அதன் வாக்கு சதவிகிதம் 33.52 இல் இருந்து 26.93 ஆக குறைந்துள்ளது.

கடந்த முறையை போலவே தற்போதும் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 12.61லிருந்து 10.67ஆக குறைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதமும் 2.4லிருந்து 2.15ஆக குறைந்துள்ளது. அதேசமயம், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் முதல் இடத்திற்கு இருந்த போட்டியை விட 2ஆம் இடம் யாருக்கு என்ற போட்டிதான் தேர்தலுக்கு முன்பில் இருந்தே நடந்து வந்தது. அதனால், 2ஆவது இடம் பிடித்திருப்பது யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம்தான் பொதுவாக பலரிடமும் உள்ளது.

அதிமுக, தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 35 தொகுதிகளில் 24ல் 2ஆம் இடமும், 10ல் 3ஆம் இடமும், ஒன்றில் 4ஆம் இடமும் பிடித்துள்ளது. அதிமுகவின் வாக்கு சதவிகிதம் 19.39லிருந்து 20.46 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் வாக்கு சதவிகிதமும் 2.59ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகம் இருந்தது. இச்சூழலில் தனது சின்னமான தாமரையில் 25 இடங்களில் பாஜக போட்டியிட்டது. அதில் 10 இடங்களில் 2ஆவது இடமும், 14 தொகுதிகளில் 3ஆவது இடமும் பிடித்துள்ளது.

பாஜக கூட்டணியிலுள்ள பாமக தருமபுரியில் மட்டும் 2ஆம் இடத்தை பிடித்தது. போட்டியிட்ட மற்ற 9 தொகுதிகளில் 8இல் 3ஆம் இடத்தையும் ஓரிடத்தில் 4ஆம் இடத்தையும் அக்கட்சி பிடித்தது. ஒட்டுமொத்தமாக பாஜக மட்டும் 11.24 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. கூட்டணியாக 18.24 சதவிகிதம் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிகம்.