தமிழ்நாடு

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம்: கருத்து தெரிவித்து பற்ற வைத்த கடம்பூர் ராஜூ

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம்: கருத்து தெரிவித்து பற்ற வைத்த கடம்பூர் ராஜூ

kaleelrahman

அதிமுக ஒற்றை தலைமையில் இயங்குவதாக முடிவெடுத்தால் தொண்டர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் திமுக ஆட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு பேசும்போது...

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நபரை பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நேரத்திலும் கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொடுக்கப்பட்ட பழைய புகார்களை தூசிதட்டி எடுத்து மீண்டும் மீண்டும் அவரை வௌ;வேறு வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கு.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையை பார்க்கும்போது தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பாதுகாக்கும் முயற்சியை அவர் முன்னெடுக்கிறாரா? ஏன எண்ணத் தோன்றுகிறது. எனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதிமுகவை முடக்கும் நினைப்பில் கேலிக்கூத்தான விஷயங்களை செய்து வருகிறனர். இந்த நடவடிக்கைகளின் மூலம் அதிமுகவை முடக்க முடியாது.

தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகின்றனர். கட்சி தலைமை முடிவெடுத்தால் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தற்போது இருக்கும் இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும், தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.