தமிழ்நாடு

மயில்களை குறிவைத்து வேட்டையாடிய கும்பல் கைது

மயில்களை குறிவைத்து வேட்டையாடிய கும்பல் கைது

webteam

விழுப்புரம் வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் காப்புக்காடு பகுதி உள்ளது. இங்கே மயில்கள், முயல்கள் மற்றும் சில வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. அவற்றை சில மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவ்வப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை எலவனாசூர் கோட்டை காவல்துறையினர் குஞ்சரம் வனப்பகுதியில் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது காவல்துறையினரை கண்ட இருவர் வனப்பகுதிக்குள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், வனப்பகுதியில் சுற்றித்திருந்தது ஏன்? என விசாரித்தனர். விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்ராயில் மற்றும் யாகோப் எனத் தெரியவந்தது. அவர்கள் இருவரும் வனப்பகுதியில் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவர்களிடமிருந்து இறந்த நிலையில் மூன்று மயில்கள், 10 கொக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு நாட்டு துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் தான் குஞ்சரம் காப்பு காட்டுப்பகுதியில் மயில்களையும் வேட்டையாடியவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.